மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களால் அங்குள்ள குழந்தைகள் கடுமையான உடல் ரீதியான பாதிப்புகளையும் உளவியல் ரீதியான வேதனையையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்று யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்மையில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், பள்ளிகள், வீடுகள், சமூக உள்கட்டமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளதால், பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் அல்லது இடம்பெயரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் நல வாழ்வு சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் நிலைமை மிகவும் இக்கட்டானதாக மாறியுள்ளது என்று கூறியுள்ள இதன் அறிக்கை 442 நலவாழ்வு மையங்கள் சேதமடைந்திருப்பதால் 22 இலட்சம் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் அடிப்படை நல வாழ்வு சேவைகளைக்கூட பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு காலத்தில் முக்கிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமாக இருந்த பாஸ்டர் நிறுவனம் (Pasteur Institute) போன்ற முக்கிய மருந்து உற்பத்தி நிலையங்களின் மீதான தாக்குதல் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என்றும், அப்பகுதியில் இடம்பெறும் தாக்குதல்கள் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடிநீர் அமைப்புகளை சேதப்படுத்தியதுடன் குழந்தைகளையும் பெருமளவில் பாதித்துள்ளன என்றும் அதன் அறிக்கை தெரிவித்துள்ளது.
Shajareh Tayyebeh என்ற பள்ளியின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சூழலில் தொடரும் மோதல் காரணமாக 760-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.
குழந்தைகளின் உயிர், மாண்பு மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மதித்து உடனடி போர்நிறுத்தத்தில் ஈடுபடவும், அதன் மூலம் பொது உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் உலக நாடுகளை யுனிசெஃப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்