தேடுதல்

மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த கப்பல் விபத்து மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த கப்பல் விபத்து 

மத்திய தரைக்கடலில் 37 பேர் உயிரிழப்பு!

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், ஐரோப்பாவில் பாதுகாப்பு தேடிச் சென்ற ஏறத்தாழ 34,500 பேர் மத்திய தரைக்கடலில் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் இந்த ஆண்டில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன‌ என்றும் கவலை தெரிவித்துள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதில் லிபியக் கடற்கரைக்கு அப்பால் 19 பேரும்,  மத்திய தரைக்கடலில் 18 பேரும் உயிரிழந்த இந்தச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இத்தகைய உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை அல்ல என்று தெரிவித்துள்ள அவ்வமைப்பு, குழந்தைகள் உள்ளிட்ட நலிந்த பிரிவினரின் பாதுகாப்பை விட, புலம்பெயர்ந்தோர் வருவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கும் ஐரோப்பியக் கொள்கைகளின் விளைவே இந்த மரணங்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தாலியின் லாம்பதூசா தீவில், விபத்திலிருந்து தப்பிப்பிழைத்த 58 பேருக்கு தற்போது உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், இவர்களில் ஏழு பேர் சிறுவர்கள், அதில் நான்கு பேர் எவ்விதத் துணையுமின்றி தனியாக வந்தவர்கள் ஆவர் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு குழந்தை உட்பட உயிர் பிழைத்த சிலருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது என்று தெரிவித்துள்ள அவ்வமைப்பு, பல உயிரிழப்புகளுக்கு தாழ்வெப்பநிலை (hypothermia) என்னும் உடலின் உள் வெப்பநிலை குறையும் நிலை ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், ஐரோப்பாவில் பாதுகாப்பு தேடிச் சென்ற ஏறத்தாழ  34,500 பேர் மத்திய தரைக்கடலில் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் இந்த ஆண்டில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன‌ என்றும் குறிப்பிட்டுள்ளது  அவ்வமைப்பு.

மேலும் அனைத்துலக சட்டத்திற்கு இணங்க, பாதுகாப்பான இடம்பெயர்வு வழிகளை அமைக்குமாறும் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை நிறுவுமாறும் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ள  அவ்வமைப்பு, அத்துடன் மனித உயிர்களைக் காப்பதற்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் மனிதாபிமான மற்றும் வணிகக் கப்பல்கள் கட்டுப்பாடுகள் இன்றி செயல்பட அனுமதிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஏப்ரல் 2026, 15:43