தேடுதல்

பெண்கள் பெண்கள்   (ANSA)

திரிகடுகம்

கற்புடைய ஒரு பெண் வீட்டில் இருப்பது இவர் கற்புடையவர் என்று பெருமை பாராட்டுவதற்குரிய ஏதோ ஒரு பண்பாடு என்பது மட்டுமன்று. அங்கே அந்த கணவர் நலம் பெறுவதற்கான மருந்தாகவும் அந்த கற்புடைய பெண் அமைகிறார்.

திரிகடுகம் என்பதுபற்றி பலரும் அறிந்திருக்கின்றோம். அது ஒரு மருந்து கூட்டு. சுக்கு மிளகு திப்பிலி என்கிற மூன்றையும் உள்ளடக்கிய ஒரு மருந்து கூட்டு. அதை போன்று ஒவ்வொரு செய்யுளிலும் மூன்று மருந்து தன்மைகளை கொடுப்பதாக இந்த செய்யுள் வடிவம் அமைந்திருக்கிறது அதுதான் திரிகடுகம். நல்லா  தனார் என்கிற ஒரு மாபெரும் புலவர் ஒரு 100 செயல்களை இப்படி வடிவமைத்திருக்கிறார். ஆதன் என்றாலே ஆன்மா என்கிற ஒரு பொருளும் உண்டு. தமிழுக்கும் இந்த உலகுக்கும் மாபெரும் மருந்துகளை அள்ளித் தந்திருக்கிறார். இங்கே இந்த நூறு செயல்களையும் நாம் தொடர்ச்சியாக பார்க்கவிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒரு செய்யுள். ஆனால் அந்த செய்யுளில் ஒரு கருத்தை மட்டுமே நாம் பார்க்கவிருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருக்கின்ற அந்த முதல் செய்யுள் திரி கடுகம் போன்ற மருந்து.  

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய

தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின்

அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம் மூன்றும்

திரிகடுகம் போலும் மருந்து

அருந்ததி என்கிறவர் ஒரு பெண். அவர் வசிஷ்ட முனிவர் என்கிறவருடைய அன்பு மனைவி. கற்புக்கு மிகச் சிறந்த பெயர் பெற்ற ஒரு பெண் என்று சொல்லப்படுகிறது. இந்த அருந்ததி போன்ற கற்புடைய ஒரு பெண் இருக்கிறார் என்றால் அந்தப் பெண்  யாரை மணமுடித்திருக்கிறாரோ அவர்தம்  அன்பு கணவருக்கு மாபெரும் மருந்து. சுக்கு போன்ற ஒரு மருந்து. ஆக கற்புடைய ஒரு பெண் வீட்டில் இருப்பது இவர் கற்புடையவர் என்று பெருமை பாராட்டுவதற்குரிய ஏதோ ஒரு பண்பாடு என்பது மட்டுமன்று. அங்கே  அந்த கணவர் நலம் பெறுவதற்கான மருந்தாகவும் அந்த கற்புடைய பெண் அமைகிறார். அங்கே இருக்கிற கணவனுக்கு மட்டும் அல்ல அவர் ஈன்றெடுத்திருக்கிற பிள்ளைகளுக்கும் அந்த வீட்டில் இருக்கிற பெரியவர்கள் உறவுகள் எல்லோருக்கும் மருந்தாகவே அந்த கற்புடைய பெண் திகழ்கிறார். அருந்ததி என்கிற அந்த இலக்கிய கற்பு டைய அந்த பெண் இங்கு பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கம்பனுக்குச் சொல்லுங்கள் அவன் கவிதை எழுதுவான்

அந்த வள்ளுவனை கூப்பிடுங்கள் வாழ்த்து பாடுவான்

அவள்  பெயரோ அருந்ததி ஐம்பதுரூபா

இவள் பெயரோ அகலிகை இருபது ரூபா

கற்புடைய பெண்களின் பெயரை வைத்துக்கொண்டு கற்பை விலை பேசுகின்ற ஒரு தொழில் நடக்கிறது என்பதை சாடுகிற வகையிலே அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம் என்று இடம்பெறும் . அருந்ததியைப் போன்ற  கற்புடைய பெண்கள் இன்று திகழ வேண்டும். அப்படியென்றால் இன்று நாம் உறுதி ஏற்க வேண்டும். வீடுகளில் இருக்கிற நம் பெண்கள் மனைவியோ, தாயோ, தங்கையோ, மகளோ யாராக இருந்தாலும் சரி  அவர்கள் கற்புடையவர்களாக இருக்க வேண்டும்.  கற்புடைய இந்த கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரிய ஒரு சொத்து அல்லது கடமை என்று சொல்லிவிட முடியாது. ஆண்களும் அந்த கற்புடைய தன்மையில் இருக்க வேண்டும். அப்படி என்றால் இங்கே நாம் ஒவ்வொருவரும் துறவிகளோ புதுமைகள் எல்லாருமே கற்புடையவர்களாக திகழ வேண்டும் என்பது முதல் மருந்து. அதோடு கற்புடையவர்களாக இருக்கிறவர்களை மதித்து பாராட்டுவது நம்முடைய கடமை. மேலும் கற்புடையவர்களாகவே இங்கு பலரையும் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்குவதற்கு அதற்குரிய சூழலையும் கட்டமைக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்த உறுதிப்பாடுகளை எல்லாம் இன்று நாம் எடுத்துக் கொள்வோம். இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு சொல் ஸ்திரி அல்லது உமன் (women).  ஸ்திரி என்றால் சமஸ்கிருதச் சொல்.  உமன் என்பது ஆங்கிலச் சொல். இவற்றிற்கான தனித்தமிழ் சொல் பெண் என்பதைப் பயன்படுத்தலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஏப்ரல் 2026, 16:38