ஆன்றோர் வாக்கு
ஆன்றோர் வாக்கு என்ற இந்தத் தொடரிலே, இன்று நாம் ஒவ்வொருவரும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான மனநிலையைப் பற்றி ஓர் அறிஞர் நமக்கு எடுத்துரைக்கிறார். வில்லியம் என்ற எழுத்தாளர், மனிதனுடைய நிலையாமையைப் பற்றியும், அவனது வாழ்வு எப்போதும் நிலைத்திருப்பது அல்ல, அதற்கு ஒரு முடிவு உண்டு என்ற உண்மையையும் வலியுறுத்த இதோ இந்த வரிகளைக் குறிப்பிடுகிறார். அவர் ஓர் அரசனுடைய கோட்டையைக் கண் முன்னால் நிறுத்தி “ஆடம்பரமான அரங்குகள், மிக அழகிய ஆடம்பரத் தளவாடங்கள், விண்ணை முட்டும் உறுதியான சுவர்கள் இவை யாவும் ஒரு நாள் காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசியைப் போல மறைந்து போகும்” என்று கூறுகிறார்.
நண்பர்களே! இந்த உலகிலே வாழ்கின்ற நமக்கு ஒரு தவறான பழக்கமும் எண்ணமும் உண்டு. நம்மிடத்தில் இருக்கின்ற பொருட்கள், நம்முடைய பதவி, செல்வச் செழிப்பு அல்லது சமுதாயத்தில் நமக்கு இருக்கும் நல்ல அந்தஸ்து ஆகியவை எப்போதும் நம்மிடமே நிலைத்திருக்கும், நம்மை விட்டு ஒருபோதும் பறிபோகாது என்று நாம் தவறாக எண்ணிக்கொள்கிறோம். ஆனால், எழுத்தாளர் வில்லியம் அழகாகக் குறிப்பிடுவது போல, தங்கத்தால் ஆன கோட்டைகளும், ஆடம்பர அழகுகளும், விண்ணை முட்டும் உறுதியான சுவர்களும் கூட ஒரு நாள் காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசியைப் போல மறைந்துதான் போகும். நமது வாழ்விலும் கூட நமக்கு இருக்கும் அனைத்தும் ஒரு நாள் மறைந்து போகும்; நம்முடைய வாழ்வும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை நாம் மனதில் நினைத்தோம் என்றால், கட்டாயமாக நம்முடைய வாழ்க்கைச் செயல்பாடுகள் மாறும். நம்முடைய வாழ்நாளில் நாம் நல்லவற்றைச் செய்வோம்; நிலையான வாழ்விற்குத் தேவையானவற்றைத் தேடி ஓடுவோம். அப்போதுதான் நம்மால் உண்மையான மகிழ்ச்சியோடு வாழ முடியும். இதை நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்று பார்ப்போமா? உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்