தேடுதல்

நகரம் நகரம் 

செல்வந்த நாடுகளின் நல்வாழ்வைச் சிதைக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வு

யுனிசெஃபின் இன்னோசென்டி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள "சமமற்ற வாய்ப்புகள்" என்ற ஆய்வறிக்கை, வளர்ந்த நாடுகளில் நிலவும் பொருளாதார இடைவெளி குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

செல்வந்த நாடுகளில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் நலவாழ்வைத் தொடர்ந்து பாதித்து வருவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நலன் குறித்து யுனிசெஃபின் இன்னோசென்டி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையான, "சமமற்ற வாய்ப்புகள் - குழந்தைகள் மற்றும் பொருளாதார சமமற்ற நிலை" என்ற அறிக்கை இவ்வாறு தெரிவித்துள்ளது.

OECD எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின்  உறுப்பு நாடுகள் மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகள் என 44 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, செல்வந்த குடும்பங்களில் 20 விழுக்காட்டினர் ஏழ்மையான குடும்பங்களை விட ஐந்து மடங்கு அதிகமாகப் பொருளீட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை வறுமையில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் ஒட்டுமொத்த நலவாழ்வில் 37 நாடுகளில் இத்தாலி 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. மனநலனில் 10-வது இடத்தைப் பிடித்தது சிறப்பாகச் செயல்படும் இத்தாலி, உடல் ஆரோக்கியத்தில் 17-வது இடத்தையும், கல்வித் திறன்களில் 25-வது இடத்தையும் பெற்று பின்தங்கியுள்ளது. வருமான சமமற்ற நிலையில் 40 நாடுகளில் 22-வது இடத்திலும், குழந்தைகள் வறுமையில் 30-வது இடத்திலும் இத்தாலி உள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் "இத்தாலியில் 23.2 விழுக்காடு குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர்" என்றும் "இந்த ஏற்றத்தாழ்வு மிக்க நிலை குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனைப் பாதிக்கிறது"  என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

"ஏற்றத்தாழ்வான நிலை அதிகமாக உள்ள நாடுகளில் உள்ள குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதற்கான வாய்ப்பு 1.7 மடங்கு அதிகமாக உள்ளது" என்றும் "ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளில் 58 விழுக்காட்டினர் மட்டுமே சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளனர்" என்றும் "இதுவே செல்வந்த குடும்பங்களில் 73 விழுக்காடாக உள்ளது" என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை மூலம் ஏற்றத்தாழ்வான சமூகங்களில் கல்வியின் தரம் குறைய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கும் யுனிசெஃப், "குழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வியில் உடனடி முதலீடு செய்யப்பட வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மே 2026, 15:50