தேடுதல்

கதைகள் ஆயிரம் கதைகள் ஆயிரம்  

கதைகள் ஆயிரம்

விவசாயியின் கண்ணீர் உலர்ந்தால்தான் நாட்டின் வயல்கள் பசுமையாகும். வாக்கு கேட்பவர்கள் பலர்; விவசாயியின் வலி கேட்பவர்கள் சிலர்.

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச.

ஒரு நாட்டின் கால்நடைத் துறை அமைச்சர், தன் நாட்டு கால்நடை வளத்தை ஆய்வு செய்ய விரும்பினார். இதற்காக ஒரு ஆய்வாளனை நியமித்து, அவரை வனத்தின் மையப்பகுதிக்கு அனுப்பி வைத்தார். அந்த ஆய்வாளனோ, மாட்டுக்கும் தன் மகனுக்கும் கூட வித்தியாசம் தெரியாத, ஏட்டுக்கல்வி மட்டுமே கற்ற ஒரு 'மேதாவி'. மறுப்பு ஏதுமின்றி வனத்தை அடைந்த அந்த ஆய்வாளர், அங்கிருந்த விலங்குகளை ஆராயத் தொடங்கினார். அப்போது அந்த வழியாக ஓர் ஆடு கடந்து சென்றது. அதுவரை ஆட்டையே பார்த்திராத அந்தப் 'படித்த' அறிவாளி, அதைக் கண்டு வியந்து அப்படியே நின்றுவிட்டார். அது என்ன பிராணி என்று தெரியாமல், ஒருவித குழப்பத்துடன் அமைச்சருக்குத் அமைச்சரே! இங்கே ஒரு விசித்திரமான பிராணியைப் பார்க்கிறேன். அது நீண்ட முகத்தோடும், வாய்க்குக் கீழே ஒரு தாடியோடும் மிகவும் பரிதாபமாகத் தோற்றமளிக்கிறது. இது என்ன பிராணி? என்று தகவல் அனுப்பினார்.

இதைக் கேட்ட அந்த அறிவாளி அமைச்சர், அடையாளங்களை வைத்துச் சட்டெனப் புரிந்துகொண்டார். உடனே, தம்பி! நீ விவரிக்கும் அந்தப் பிராணி வேறு யாருமல்ல; அது ஒரு விவசாயி. அவரோடு அன்பாகப் பழகு, ஆனால் ஜாக்கிரதை! ஏனென்றால், அந்தப் பிராணியிடம் ஒரு 'ஓட்டு' (வாக்கு) இருக்கிறது என்று பதில் அனுப்பினார். கையில் ஓட்டுகளை வைத்துக்கொண்டு, இன்று ஓட்டாண்டிகளாய் அலையும் ஒரே சமூகம் விவசாய சமூகம் தான். விவசாயம் வாழ வேண்டும் என்றால், விவசாயி வேடம் போட்டவர்கள் அழுதால் மட்டும் போதாது; உண்மையான விவசாயியின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள் திரையில் அழுதால் கதறி அழும் இந்தச் சமூகம், நிஜத்தில் கடன் சுமையால் விவசாயிகள் உயிரை விடும்போது ஏனோ கண்டு கொள்வதே இல்லை. இதுவே இன்றைய காலத்தின் மிகப்பெரிய அவலம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 மே 2026, 13:00