லம்பேடுசாவில் ஒரு மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
போர் மற்றும் வறுமையிலிருந்து தப்பிக்கத் தனது தாய் மற்றும் 52 புலம்பெயர்ந்தோருடன் மத்தியதரைக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை, இத்தாலியின் லம்பேடுசா தீவை வந்தடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மனித உயிர்களை விட எல்லைக் கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளின் மற்றொரு விளைவு தான் இந்த பச்சிளம் குழந்தையின் உயிரிழப்பு என்று சேவ் த சில்ட்ரன் அமைப்பு விவரித்துள்ளது.
இந்த மரணம் வெறும் தற்செயலான நிகழ்வல்ல, மனித உயிர்களை விட எல்லைப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தவறான கொள்கைகளின் விளைவு என்று குறிப்பிட்ட save the children அமைப்பின் இயக்குநர் ஜியோர்ஜியா டி'எரிகோ அவர்கள், மேலும், பாதுகாப்பைத் தேடும் உரிமை பேரம் பேசப்படக் கூடாதது என்றும், எத்தகைய சூழலிலும் குழந்தைகளின் நலனுக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2014 முதல் ஐரோப்பாவை நோக்கிப் பயணித்த 34,800-க்கும் அதிகமானோர் மத்தியதரைக் கடலில் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் கடலில் பலியாகியுள்ளனர்; இவர்களில் 800-க்கும் அதிகமானோர் மத்தியதரைக் கடல் பாதையிலேயே உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய ஆண்டுகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடலில் உயிரிழந்து வரும் நிலையில், லம்பேடுசாவில் தஞ்சம் புகுந்தவர்களில் துணையின்றி வந்த 20 சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு save the children அமைப்பின் குழுவினர் அவசர கால வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்வோர் வர பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், மத்தியதரைக் கடலில் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை save the children அமைப்பு மீண்டும் புதுப்பித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்