இத்தாலியின் தேசிய சட்ட தினத்தில் புதிய இலக்கு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இத்தாலியில் உள்ள கபாசி எனும் இடத்தில் 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் நினைவு தினமான மே 23, இத்தாலிய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகவும், மாஃபியாவுக்கு எதிரான தேசத்தின் போராட்டத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது என்று இத்தாலி நாட்டின் அரசு தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா அவர்கள் கூறியுள்ளார்.
இத்தாலிய மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கில் மாஃபியாக்கள் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக இந்த மே 23 வன்முறை அமைகிறது என்று செர்ஜியோ மட்டரெல்லா குறிப்பிட்டுள்ளார்.
மாஃபியா எதிர்ப்பு நீதிபதிகளான ஜியோவானி ஃபால்கோன் மற்றும் பாலோ போர்செல்லினோ ஆகியோருக்கும், தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இத்தாலி குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினார். இதன்மூலம் அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் செய்த தியாகத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
"இந்த படுகொலை தேசிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டியது" என்றும், "மே 23-ஐ இத்தாலியின் 'தேசிய சட்ட தினமாக' அங்கீகரிப்பதற்கு வழிவகுத்தது" என்றும் மட்டரெல்லா அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் "மாஃபியா இங்குள்ள நிறுவனங்களை அச்சுறுத்தும் தனது திட்டத்தில் தோல்வியடைந்தது" என்றும், "அதற்குப் பதிலாக நிறுவனங்கள் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் பதிலளித்தன" என்றும், "அதற்குத் துணிச்சலான குடிமக்கள் அளித்த ஆதரவே காரணம்" என்றும் மட்டரெல்லா அவர்கள் வலியுறுத்தினார்.
"வலிமையான அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மற்றும் திறன்மிக்க செயல்பாடுகளால், திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது" என்றும் "இளைய தலைமுறையினருக்கு நீதி, சட்டம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தைக் கட்டமைக்க உதவும் கல்வியை அளிப்பதன் மூலமும் இந்த போராட்டம் தொடரும்" என்றும் மட்டரெல்லா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்