தேடுதல்

திரிகடுகம் திரிகடுகம் 

திரிகடுகம்

சான்றோர்கள் காட்டிய நல்வழியில் நடப்பதே மனித வாழ்வின் உண்மையான மேன்மை என்பதை உணர்த்துகிறது. மாமனிதர்களின் கொள்கைகளையும் ஒழுக்க நெறிகளையும் பின்பற்றி வாழும்போது மட்டுமே, மனிதன் உயர்ந்த சிந்தனையுடனும் அறநெறியுடனும் வாழ முடியும்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

நாம் தற்போது திரிகடுகத்தின் இரண்டாம் செய்யுளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதில் உள்ள மூன்று கருத்துகளில், இன்று நாம் பார்க்கவிருப்பது மூன்றாம் கருத்தாகும்.

"நன்குணர்வின் நான்மறையாளர் வழிச்செலவும்... இம்மூன்றும் மேன்முறையாளர் தொழில்"

என்பது அந்தப் பாடல் வரி. இதன் பொருள்: அறத்தின் தன்மையை ஆழமாக அறிந்து, ஆய்ந்து, அதன் அடிப்படையில் வாழ முயல்கின்ற சான்றோர்களின் வழியில் நாமும் வாழ்வதற்கு உறுதி ஏற்றல் வேண்டும் என்பதாகும். அத்தகைய சான்றோர்களே மேன்மையாளர்கள் (மேன்முறையாளர்கள்). அந்தப் பேரறிஞர்கள், பல்வேறு காலங்களில் பல்வேறு தளங்களில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டு இந்த உலகத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் வழித்தடத்திலேயே நாமும் நடைபயில வேண்டும்.

மனித நடையும், கால்நடையும்!

மனிதர்கள் கால்களால் நடந்தாலும், அவர்களை நாம் 'கால்நடைகள்' என்று அழைப்பதில்லை; அது விலங்கினங்களைக் குறிக்கும் சொல். ஏன் தெரியுமா? மனிதர்கள் வெறும் கால்களால் மட்டும் நடப்பதில்லை; அவர்கள் தங்களின் சிந்தனையால், எண்ணத்தால், பார்வையால், உயரிய கொள்கைகளால் நடக்கிறவர்கள்! இந்த அக நடையை மறந்துவிட்டு, வெறுமனே கால்களால் மட்டும் நடக்கிறோம் என்றால், நமக்கும் விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே, நம்முடைய நடை கொள்கை நடையாக இருக்க வேண்டும். நமக்கு முன்னால் வாழ்ந்து காட்டிய மாமனிதர்களின் வழி நடையைப் பின்பற்றுங்கள்.

இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை,

  • "அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
  •   பேணி தமராக் கொளல்" (குறள் 443)

என்று குறிப்பிடுகிறார். உலகிலேயே மிக அரிதான, சிறந்த செயல் எதுவென்றால், தம்மைவிட அறிவிலும் ஒழுக்கத்திலும் பெரியவர்களைப் போற்றி, அவர்களைத் தமக்குச் சுற்றமாகக் கொண்டு வாழும் வாழ்க்கை முறைதான். இங்கு 'பெரியவர்' என்று நாம் சிந்திக்கும்போது தந்தை பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், பேரறிஞர் அண்ணல் அம்பேத்கர் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இவர்களுடைய வழித்தடத்தில் செல்வதற்கான முயற்சிதான், அந்தப் பெரியவர்களைத் நம் வழிகாட்டிகளாக ஏற்று, அரவணைத்து வாழும் வாழ்க்கை முறையாகும். யாரெல்லாம் இப்படி வாழ்கிறார்களோ, அவர்களே மேன்மைக்குரிய செயல்களைச் செய்கிறார்கள் என்று திரிகடுகம் நமக்கு எடுத்துரைக்கிறது. இத்தகைய மேன்மையாளர்கள் நம் சமூகத்தில் பெருக வேண்டும். அதற்கு, நம் இலக்கியங்கள் கற்பிக்கும் உன்னதமான அறக் கருத்துகளை நாம் பயில வேண்டும்; அதற்கான சூழலை ஒவ்வொரு நாளும் நாம் உருவாக்க வேண்டும்.

இயேசுவின் நட்புக் கொள்கை:

இந்தச் சூழலில் இயேசு கிறித்துவின் ஒரு போதனை நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவார்: "என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேனோ, அதை நீங்கள் செய்யுங்கள். அப்படிச் செய்வதனால் நீங்கள் என்னுடைய பணியாளர்கள் (ஊழியர்கள்) மட்டுமல்ல, உங்களை நான் என் நண்பர்கள் என்கிறேன்." இதன் காரணம் என்னவென்றால், ஊழியர்களுக்குத் தலைவனின் கொள்கை என்ன, நோக்கம் என்ன என்று தெரியாது; அவர்கள் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள் போன்றவர்கள். ஆனால், நண்பர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கையையும், அதன் பின்னுள்ள உறுதிப்பாட்டையும் முழுமையாக ஏற்று, அதன் அடிப்படையில் வாழ முயல்பவர்கள். நாமும் மற்றவர்களை மாமனிதர்களாக உருவாக்கும் சிற்பிகளாகத் திகழ வேண்டும். அத்தகைய மனிதர்களாக நாம் உருவாவதற்கு, நல்லாதனார் இந்தத் திரிகடுகத்தின் ஊடாக நமக்கு வழிகாட்டுகிறார். நாம் இன்று மனிதர்களுக்குரிய அந்த உயரிய ஒழுக்கத்தைக் கடைபிடிப்போம்; சான்றோர்கள் காட்டிய நெறிகளைச் செய்து முடிப்போம். நமக்கு முன்னர் வாழ்ந்து வழிகாட்டிய முன்னோர்களின் வழித்தடத்தில் நடப்போம் என்று உறுதி ஏற்போம்!

இன்றைய சிறப்புச் சொல்: 'வேதம்'

இறுதியாக, இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு சிறப்புச் சொல்: 'வேதம்'.

வேதம்' என்பது தமிழ்ச் சொல் அல்ல; 'வேதா' என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. இதற்குத் தமிழில் 'மறை' என்று பொருள். இதனால்தான், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலை அடிகளின் இயற்பெயரான 'சுவாமி வேதாச்சலம்' என்பதில் உள்ள 'வேதா' (வேதம்) என்பதை 'மறை' என்றும், 'அசலம்' (மலை) என்பதை 'மலை' என்றும் மாற்றி, தங்களின் பெயரைத் தூய தமிழில் 'மறைமலை அடிகள்' என்று அமைத்துக் கொண்டார்.

தொடர்ந்து திரிகடுக சிந்தனையில் இணைந்து மகிழ்வோம். நன்றி, வணக்கம்!

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2026, 15:19