தேடுதல்

திரிகடுகம் திரிகடுகம் 

திரிகடுகம்

மேன்மையுடையவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் குறித்து நல்லாதனார் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

தமிழினிய நெஞ்சங்களுக்கு வணக்கம். நாம் திரிகடுகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இன்று நாம் காண்பது இரண்டாம் செய்யுள். மேன்மையுடையவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் குறித்து நல்லாதனார் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

"தகைமையும் தாவில் சீர்ச் சான்றோர் ஏவினர் செய்தலும் நன்குணர்வின் நான்மறையாளர் வழிச் சேறலும் - இம்மூன்றும் மேல்முறையாளர் தொழில்"

மேன்மை உடையவர்களுடைய பண்புகள் இவை மூன்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அவற்றுள் முதன்மையானது ஒழுக்கம். ஒருவர் பிறந்த குடி மற்றும் குடும்பத்தின் புகழை மேன்மை குன்றாமல் காப்பதற்கு உதவுவது அந்த ஒழுக்கமே. அந்த ஒழுக்கத்தை ஏற்று வாழ்கின்ற தன்மைதான் மேன்மையாளர்களுடைய முதன்மையான ஒரு தொழில் அல்லது குணம் ஆகும். இங்கு 'பிறப்பு' குறித்து தேவநேயப் பாவாணர் மற்றும் பரிமேலழகர் ஆகியோரின் கருத்துகளைச் சிந்திப்பது அவசியம். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற குறளுக்கு விளக்கம் அளிக்கும்போது, சிலர் ஜாதியை நியாயப்படுத்த முயல்வர். ஆனால் தேவநேயப் பாவாணர், "அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்" என்ற குறளைச் சுட்டிக்காட்டி, பண்புகளால் மட்டுமே மனிதர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை விளக்குவார். உயர்ந்த பண்பு உடையவர்கள், தாழ்ந்த பண்பு உடையவர்கள் என்பதுதான் வேறுபாடே தவிர, பிறப்பால் ஜாதியோ வேறு எந்த பாகுபாடோ கிடையாது என்பதை மிக வலிமையாகக் கூறுகிறார்.

நல்லாதனார் 'தொழில்' என்று குறிப்பிடுவது, நாம் ஏற்றிருக்க வேண்டிய நற்பண்புகளைத்தான். வள்ளுவர் கூறுவது போல, "நல்லொழுக்கம் நன்றிக்கு வித்தாகும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்." விவிலியத்தில் சொல்லப்படுவது போல, "உங்கள் நெறி மற்றவர்களின் நெறியை விடச் சிறந்து இருக்க வேண்டும்; இல்லையெனில் நீங்கள் விண்ணரசுக்குச் செல்ல முடியாது." இந்த ஒழுக்க நெறி நம்மை மண்ணகத்தில் மகிழ்வாக வாழ வைப்பதோடு, கடவுளையும் மகிழ்ச்சிக்கு உட்படுத்தி விண்ணகப் பேற்றைப் பெற வழிவகை செய்கிறது.

ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டும் பொதுவானதல்ல; இயற்கை வளங்களும் உயிரினங்களும் தத்தம் ஒழுங்குடன் இயங்க வேண்டும். பகுத்தறிவு படைத்த மனிதர்கள் அதற்கு உதவ வேண்டும். உதாரணத்திற்கு, பசிபிக் பெருங்கடலில் ஆயுத ஆய்வு செய்து, அதன் விளைவாக இந்தோனேஷியா போன்ற பகுதிகளில் நிலநடுக்கத்தையும் ஆழிப்பேரலையையும் (சுனாமி) கொண்டு வருவது ஒரு 'ஒழுக்க சீர்கேடு'. இயற்கை அதன் ஒழுக்கத்தோடு இருக்க, கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் துணை நிற்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் விருதுவாக்காகச் சொல்லப்படும் அந்த ஒழுக்கத்தை நாமும் கடைப்பிடித்து, மற்றவர்களும் கடைப்பிடிக்கச் சூழலை உருவாக்குவோம் என உறுதி ஏற்போம்.

இன்று நாம் பார்க்கவிருக்கும் சிறப்புச் சொல் 'புண்ணியம்'. 'புண்ணியா' என்பது சமஸ்கிருதச் சொல்லாகக் கருதப்படுகிறது. இதற்கு இணையான மிகச்சிறந்த தமிழ்ச் சொற்களாக நாம் 'விழுமியம்' அல்லது 'நற்குணம்' போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். மீண்டும் திரிகடுகத்தில் இணைந்து மகிழ்வோம். நன்றி, வணக்கம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மே 2026, 13:45