ஐநா-வின் அணுஆயுதப் பரவல் தடை மாநாடு: இறுதி உடன்பாடின்றித் தோல்வியில் நிறைவு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் 11-வது மறுஆய்வு மாநாடு, இறுதி வரைவு ஆவணத்தை ஏற்றுக்கொள்ளாமலேயே வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்துள்ளது. இது பங்கேற்பு நாடுகளிடையே நிலவும் ஆழமான பிளவுகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில், அணுஆயுதப் பரவல் தடை, ஆயுதக் குறைப்பு மற்றும் அணுஆற்றலின் அமைதியான பயன்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்ய அதன் கூட்டணி நாடுகள் ஒன்றுகூடின.
இருப்பினும், பல வாரங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு பொதுவான அறிக்கையை உருவாக்குவதில் கூட்டணி நாடுகளின் பிரதிநிதிகளிடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
பகுதிசார் பாதுகாப்பு பற்றிய கவலைகள், அணுஆயுதக் கிடங்குகளை நவீனப்படுத்துதல் மற்றும் மோதல் ஏற்படும் பகுதிகளில் உள்ள அணுஆற்றல் நிலையங்கள் தொடர்பான பதட்டங்கள் ஆகியவை முக்கிய கருத்து வேறுபாடுகளாக அமைந்தன. அதிகரித்து வரும் உலகளாவிய நிலையற்ற சூழலில், ஒருமித்த பதிலை அளிக்கத் தவறியது குறித்து பல பிரதிநிதிகள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்தனர்.
1970-ம் ஆண்டு முதல் அமலில் உள்ள அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அனைத்துலக ஆயுதக் குறைப்பு முயற்சிகளின் ஒரு முக்கிய தூணாகத் திகழ்கிறது. அணுஆயுதப் பரவலைத் தடுத்தல், அமைதியான அணுஆற்றல் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் முழுமையான ஆயுதக் குறைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதன் இலக்குகளாகும்.
மாநாடு முழுவதும், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பன்முக உரையாடலை வலுப்படுத்துவதற்கும் உடனடித் தேவை இருப்பதாகப் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.
திருத்தந்தை பதினான்காம் லியோ மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் விடுத்த கோரிக்கைகளை எதிரொலிக்கும் வகையில், அச்சம் மற்றும் இருதரப்பு அழிவுக்குப் பதிலாக நீதி, உரையாடல் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் அமைதியை நிலைநாட்ட, முழுமையான அணுஆயுதக் குறைப்புக்கான தனது அழைப்பை திருப்பீடம் மீண்டும் வலியுறுத்தியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்