காங்கோவில் தீவிரமடையும் எபோலா தொற்று: 100 டன் அவசரக்கால உதவிகளை வழங்குகிறது யுனிசெஃப்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்கில் அமைந்துள்ள இட்டூரி பகுதியில் மோசமடைந்து வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, யுனிசெஃப் 100 டன்னுக்கும் அதிகமான அவசரக்கால மனிதாபிமானப் பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், நலவாழ்வுப் பணியாளர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள், நலவாழ்வுப் பெட்டிகள் மற்றும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றை யுனிசெஃப் வழங்கிவருகிறது.
மே 26, நிலவரப்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 121 பேர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,077 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் மனிதாபிமான உதவித் துறையின் (ECHO) ஆதரவுடன் செயல்படும் சிறப்பு மனிதாபிமான விமானச் சேவை மூலம், கோபன்ஹேகனில் உள்ள யுனிசெஃபின் உலகளாவிய விநியோகம் மற்றும் தளவாட மையத்திலிருந்து இந்த அவசரக்கால பொருள்கள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
இந்தச் சூழலை 'காலத்துடனான ஒரு பந்தயம்' என்று விவரித்துள்ள யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதியான ஜான் அங்போர் அவர்கள், களப்பணியாளர்களையும் விளிம்புநிலை சமூகங்களையும், குறிப்பாக குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளார்.
மோதல், இடம்பெயர்வு மற்றும் சமூக சேவைகளுக்கான போதிய அணுகல் இல்லாத பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ 1,00,000 மக்களுக்கு இந்த உதவி சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்று தடுப்பு, சமூக ஈடுபாடு, நலவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்த அந்த நாட்டின் அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்களுடன் இணைந்து யுனிசெஃப் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனம் தனது மிக உயர்ந்த அவசரக்கால உதவி நிலையை செயல்படுத்தியுள்ளதுடன், நெருக்கடி கால நடவடிக்கைகளுக்காக 6.5 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்