தேடுதல்

2026.07.14 kid

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தீவிரம்: யுனிசெஃப் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால், ஐந்து வயதிற்குட்பட்ட 37 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஆபத்தில் இருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள ஐந்து வயதிற்குட்பட்ட 37 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரை ஊட்டச்சத்துக் குறைபாடு உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், "மிகக் குறைவு, மிகத் தாமதம்: ஆப்கானிஸ்தானின் இளம் குழந்தைகள் எதிர்கொள்ளும் உணவுமுறை நெருக்கடி" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள யுனிசெஃப் நிறுவனம், முதன்முறையாக, ஆப்கானிஸ்தானின் அனைத்து மாநிலங்களிலும் நிலவும் உணவுப் பாதுகாப்பற்ற நிலையோடு சேர்த்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டையும் மதிப்பீடு செய்துள்ளது.

இதில் உணவு வகையில் பன்முகத்தன்மை குறைதல், உணவைத் தவிர்த்தல், தேவைக்குக் குறைவாக உண்ணுதல் மற்றும் பசியோடு இருப்பது போன்ற ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளை யுனிசெஃப் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

அண்மையில் வெளியான ஊட்டச்சத்து கூட்டமைப்பின் (Nutrition Cluster) தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானின் 34 மாநிலங்களில் 26 மாநிலங்களில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மேலும் மோசமடைந்துள்ளது.

இதில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுகளில் 83 விழுக்காடு பாதிப்புகளும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுகளில் 77 விழுக்காடு பாதிப்புகளும் இந்த வயதினரிடமே காணப்படுகின்றன.

யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதியான டாக்டர் தஜுதீன் ஓயேவாலே அவர்கள், குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாவதற்கு முன்பாகவே, இந்த ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தைத் தடுப்பதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பற்றாக்குறை மட்டுமின்றி, நோய் பரவல், குறைந்த அளவிலான தடுப்பூசி, போதிய அளவு தூய்மையான குடிநீர் மற்றும் தூய்மை மற்றும் துப்புரவு சேவைகள் இல்லாமை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவையும் இந்த ஊட்டச்சத்து குறைபாடு மோசமடைவதற்கான காரணங்களாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற வீடுகளில் உள்ள குழந்தைகள், அதிக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 6 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைவதற்கு முன்பு, "முதல் உணவுகள்" என்ற திட்டம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கும் திட்டங்களை விரிவுபடுத்தவும், அத்தியாவசிய நலவாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை வலுப்படுத்தவும் உடனடி நிதி வழங்குமாறு யுனிசெஃப் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

14 ஜூலை 2026, 12:51