தேடுதல்

நோபல் பரிசு பெற்ற உக்ரைன் மனித உரிமை ஆர்வலர் ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சு நோபல் பரிசு பெற்ற உக்ரைன் மனித உரிமை ஆர்வலர் ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சு 

செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும்: நோபல் பரிசு பெற்ற ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக்!

உலகளாவிய போர் மற்றும் மோதல்களின் பின்னணியில், 2022-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உக்ரைன் மனித உரிமை ஆர்வலர் ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக், ஐக்கிய நாடுகள் அவையில் சீர்திருத்தங்களும், செயற்கை நுண்ணறிவை மனித மாண்பைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்துவதும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

உலகெங்கிலும் போர்களும் மோதல்களும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், "ஐக்கிய நாடுகள் அவையில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தவும் வேண்டும்" என்று உக்ரைனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் 2022-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 14 முதல் 16 வரை காஸ்தல் கந்தோல்போவில் உள்ள லௌதாதோ சி கிராமத்தில் இடம்பெற்ற, செயற்கை நுண்ணறிவு மற்றும் அணு ஆற்றல் போர் குறித்த உலகளாவிய நோபல் பரிசு பெற்றவர்களின் மாநாட்டின் போது வத்திக்கான் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த மாட்விச்சுக் அவர்கள், ஐநா சாசனம் மற்றும் அனைத்துலக சட்டத்தின் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்குமுறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரித்தார்.

மனித உயிர், சுதந்திரம் மற்றும் மாண்பைப் பாதுகாப்பதே இன்றைய உலகின் மிகப்பெரிய சவால் என்று வலியுறுத்திய அவர், முரட்டுத்தனமான வலிமையை நீதியால் வெல்ல முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும் "என்னைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது மனிதகுலத்தை சீர்குலைப்பதற்குப் பதிலாக எப்போதும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதாகவே இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனுக்குள் முழுமையாக ஊடுருவிய பிறகு உக்ரைனில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திய குடிமை உரிமைகளுக்கான மையத்தின் தலைவரான மாட்விச்சுக் அவர்கள், செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதங்கள், மனிதனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பது பற்றிய ஆழமான சிந்தனையுடன் தொடங்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் 'மகத்தான மானுடம்' என்ற திருத்தூது மடலை வரவேற்ற அவர், "சட்ட மற்றும் அறநெறிக் கட்டமைப்புகள் இன்னும் போதுமானதாக இல்லாத இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு குறித்த அறநெறித் தெளிவை வழங்கும் ஒரு சரியான மற்றும் முக்கியமான வழிகாட்டியாக இந்த மடல் அமைந்துள்ளது" என்று விவரித்தார்.

செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு போர்களில் மீள முடியாத பேரழிவை ஏற்படுத்துவதற்கு முன்பாக, அதற்கான வலுவான அனைத்துலக ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆதரவாளரான ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக் அவர்கள் வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரோம் பிரகடனத்தை வரவேற்ற அதே வேளையில், இந்தப் பிரகடனத்தின் வெற்றி என்பது அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் மற்றும் அர்த்தமுள்ள உலகளாவிய ஒத்துழைப்பைச் சார்ந்தே அமையும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூலை 2026, 13:36