ஈரான்–அமெரிக்கா பதற்றம் தீவிரம்; பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அழைப்பு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஈரானிய மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் மீது அமெரிக்கா எந்தவொரு தாக்குதலை நடத்தினாலும், மேற்கு ஆசியா முழுவதும் உள்ள உள்கட்டமைப்புகளுக்கு எதிராக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்காவிட்டால், அடுத்த வாரம் ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா விரிவுபடுத்தலாம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
முன்னதாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய தாக்குதல்களைத் தொடங்கியது, அதே நேரத்தில் வாஷிங்டன் ஈரானுக்குள் உள்ள இலக்குகள் மீது இரவு முழுவதும் தாக்குதல்களைத் தொடர்ந்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்திற்கு சவால் விடும் வகையில், தொடர்ந்து ஆறாவது நாளாக இடம்பெறும் மோதலில் யோர்தான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள தளங்களை தாக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் "அப்பாவி மாலுமிகளை அச்சுறுத்தும் ஈரானின் திறனைக் குறைப்பதற்காக" பல இடங்களில் ஆறு மணி நேர தொடர் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அதிகரித்து வரும் இந்த மோதல் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அவர்கள், "பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவின் பாதைக்குத் திரும்பவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க" அனைத்துத் தரப்பினரையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து உரிமைகளை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும்" என்ற கோரிக்கைகளையும் குட்டரெஸ் அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மாலுமிகளைப் பாதுகாப்பதற்கும், சுதந்திரமாக கப்பல்களை இயக்குவதை உறுதி செய்வதற்கும் நிதானத்தை கடைபிடிக்குமாறு உலகளாவிய கடல்சார் அமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.