தேடுதல்

திரிகடுகம் திரிகடுகம்  

திரிகடுகம்

நல்ல நட்பு வாழ்க்கையை உயர்த்தும்; தீய நட்பு வாழ்க்கையை வீழ்த்தும். உன்னை இழிவுபடுத்துபவர்களிடம் அல்ல, உன்னை உயர்த்துபவர்களிடம் நட்பு கொள்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

தீயவர்களின் நட்பைத் தவிர்ப்போம்

தமிழினிய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

திரிகடுகத்தின் நான்காம் செய்யுளில் இடம்பெறும் மூன்று கருத்துகளில், இன்று மூன்றாவது கருத்தான "திப்பிலி" பற்றி சிந்திப்போம்.

"முன் தன்னைக் காய்வானைக் கைவாங்கிக் கூடலும்..."

அதாவது, நம்மைத் தொடர்ந்து அவமானப்படுத்தி, இழிவுபடுத்தி, துன்புறுத்துகிற ஒருவரை மீண்டும் நெருங்கிய நண்பராக ஏற்றுக்கொள்வது அறிவுடைமையல்ல. அது பெருந்தன்மை என்று நினைப்பது தவறு. உண்மையான பெருந்தன்மை என்பது அறிவோடு செயல்படுவதில்தான் இருக்கிறது. அதனால்தான் திரிகடுகம், நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்ளுங்கள்; தீயவர்களின் நட்பிலிருந்து விலகுங்கள் என்று அறிவுறுத்துகிறது. திருவள்ளுவரும் இதே கருத்தை வலியுறுத்துகிறார். ஒத்த பண்புகள் இல்லாத, அறநெறி இல்லாதவர்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். தேவைப்பட்டால் அத்தகைய நட்பை விட்டுவிடுவதற்காக சிறு இழப்பைச் சந்தித்தாலும் அது நன்மையே. ஒளவையார் கூறும், "தலைவாசல் மிதியாதே" என்ற அறிவுரையும் இதையே உணர்த்துகிறது. இது வெறும் மரியாதை கிடைக்காத வீட்டிற்குச் செல்ல வேண்டாம் என்பதல்ல. மாறாக, அறத்தை மதிக்காதவர்கள், சமத்துவத்தை ஏற்காதவர்கள், நேர்மையை விரும்பாதவர்கள் வாழும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்பதே அதன் ஆழமான பொருள்.

ஒரு பழமொழி கூறுகிறது: "பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்." அதுபோல நல்லவர்களோடு பழகினால் நாமும் நல்லவர்களாக மாறுவோம். தீயவர்களோடு பழகினால் அவர்களது குணங்கள் நம்மையும் பாதிக்கும். இன்றைய உலகில் நல்ல உறவுகளை உருவாக்குவது மிகவும் அவசியம். நம்மை உயர்த்தும் உறவுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். நம்மை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் உறவுகளைத் துணிச்சலுடன் விலக்க வேண்டும்.

இயேசு கூறுகிறார்: "நானே வழியும், உண்மையும், வாழ்வும்." (யோவான் 14:6) அவருடைய வழியில் நடப்பவர்கள் உண்மை, அன்பு, நீதியோடு வாழ்பவர்கள். அவர்களைப் போன்ற நல்லவர்களோடு இணைந்து வாழ்வதே நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

எனவே, திரிகடுகம் நமக்கு வழங்கும் இன்றைய பாடம் இதுதான்:

1.      பகைவரிடம் நமது பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்.

2.      ஆபத்தான சூழ்நிலைகளில் கவனமின்றி நுழையாதீர்கள்.

3.      நம்மை இழிவுபடுத்துபவர்களை நெருங்கிய உறவாக ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

4.      நல்லவர்களோடு நட்பு கொண்டு, அறத்தின் வழியில் வாழுங்கள்.

அவ்வாறு வாழும்போது நமது வாழ்க்கை அழிவை நோக்கிச் செல்லாது; மாறாக, உயிர்ப்பும் நன்மையும் நிறைந்த வாழ்வாக அமையும்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூலை 2026, 12:53