தேடுதல்

ரிமினி மக்கள் நட்புறவு சந்திப்பில் வத்திக்கான் செய்தியிடம் பேசிய நசீரா கெர்மிச் மற்றும் ரோசலின் ஹமெல். ரிமினி மக்கள் நட்புறவு சந்திப்பில் வத்திக்கான் செய்தியிடம் பேசிய நசீரா கெர்மிச் மற்றும் ரோசலின் ஹமெல். 

மன்னிப்பின் மூலம் மலரும் அமைதி: துயரத்தைத் தாண்டிய இரு தாய்மனங்கள்

2016ஆம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அருள்பணியாளர் ஜாக் ஹேமலின் சகோதரி ரோஸ்லின் ஹேமலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் தாயான நசீரா கெர்மிச்சும் “துயரத்தில் இணைந்த சகோதரிகள்” என அறியப்படுகின்றனர். ஒருவரையொருவர் சந்தித்த அவர்களின் பயணம், மன்னிப்பு, குணமடைதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையின் சாட்சியாக மாறியது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு அருள்பணியாளர் ஜாக் ஹேமலின் சகோதரி ரோஸ்லின் ஹேமலும், அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் தாயான நசீரா கெர்மிச்சும் “துயரத்தில் இணைந்த சகோதரிகள்” என்று அறியப்படுகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, தன்னை விட வேறு யார் அதிகமாக வேதனைப்பட்டிருக்க முடியும்? என்று ரோஸ்லின் சிந்தித்தார். பின்னர், நசீராவையும் ஒரு தாயாக அவர் அனுபவித்த வலி, குற்ற உணர்வு மற்றும் அவமானத்தையும் எண்ணிப் பார்த்தார். இந்தச் சிந்தனையே ரோஸ்லினை நசீராவைத் தொடர்புகொண்டு, அவரை நேரில் சந்திக்கத் தூண்டியது.

அவர்களின் முதல் சந்திப்பு மன்னிப்பு, குணமடைதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையின் பயணமாக மாறியது. உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்ட நசீராவால், "என்னை மன்னித்து விடுங்கள்" என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வெறுப்பு பழிவாங்கலுக்கும், வன்முறைக்கும், மனிதநேயத்தின் அழிவுக்கும் மட்டுமே வழிவகுக்கும் என்று நம்பிய ரோஸ்லின், வெறுப்பு தன் மனதில் வேரூன்ற அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்.

தன் மகனை இழந்த பிறகு தான் அனுபவித்த குற்ற உணர்ச்சி, அவமானம், கோபம் மற்றும் விடைதெரியாத கேள்விகளைப் பற்றி பேசிய நசீரா இன்று, சமூக வலைத்தளங்களில் வரும் கேடு விளைவிக்கும் செய்திகளில் எச்சரிக்கையாக இருக்குமாறும், பெற்றோரின் சொல்லைக் கேட்குமாறும், தீவிரவாதக் கருத்துக்களால் தவறாக வழிநடத்தப்படாமல் இருக்கத் தங்கள் மத நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளுமாறும் அவர் இளைஞர்களை ஊக்குவித்தார்.

ரோஸ்லின் தன் சகோதரர் ஜாக்கை கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்யத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு எளிமையான, அருள்பணியாளராக நினைவுகூர்ந்தார்.

இரு பெண்களும் இணைந்து அமைதி, மன்னிப்பு மற்றும் சகோதரத்துவத்தின் வலிமையான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வேறுபாடுகள் மற்றும் பாகுபாடுகளைக் கடந்து மற்றவர்களைச் சந்திப்பது நம்பிக்கையை மீட்கும், மனிதநேயத்தைப் பலப்படுத்தும், மேலும் வெறுப்பு, பழிவாங்குதல் அல்லது வன்முறைக்கு இடம் தராது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஆகஸ்ட் 2026, 15:11