தேடுதல்

திரிகடுகம்  திரிகடுகம்  

திரிகடுகம்

நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நல்ல பண்புகளையும் திறமைகளையும் கண்டறிந்து, அவர்களைப் பாராட்டுவோம். அவர்களின் வளர்ச்சிக்கு நமது வார்த்தைகள் ஊக்கமாக அமையட்டும்.

பிறரைப் பாராட்டும் பண்பு

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

தமிழின நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்! என் அன்பான நன்றிகளும் வாழ்த்துகளும். இன்று திரிகடுகத்தின் ஆறாம் செய்யுளில் நாம் நுழைகிறோம். அந்தச் செய்யுள் கூறும் முக்கியமான கருத்து பிறரைப் போற்றுதல் மற்றும் அவர்களின் சிறப்பை அங்கீகரித்தல் ஆகும். நம்மை ஒருவர் பாராட்டும்போது, அந்தப் பாராட்டைக் கேட்டு பெருமிதம் கொள்வதைவிட, பணிவோடும், அடக்கத்தோடும், ஞானத்தோடும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், பிறர் நம்மைவிடச் சிறந்தவர்களாகவும், திறமைமிக்கவர்களாகவும் இருக்கும்போது, அவர்களின் திறமையையும் மேன்மையையும் நாம் மனதாரப் பாராட்ட வேண்டும். இன்றைய சமூகத்தில் நல்லவர்கள், திறமைசாலிகள், சமூகத்திற்காக உழைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால், சில நேரங்களில் பொறாமை, போட்டி மனப்பான்மை அல்லது அவர்களின் திறமையைப் பொருட்படுத்தாத நிலை காரணமாக, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. மேன்மைக்குரியவர் என்றால், அவரை மேன்மைக்குரியவர் என்று வெளிப்படையாகப் பதிவு செய்வதே நமது கடமை.

திருவிவிலியத்திலும் பிறரின் சிறப்பை அங்கீகரிக்கும் பல நிகழ்வுகளைப் பார்க்கிறோம். நத்தனியேலைப் பற்றி இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர்; இவரிடம் கபடம் இல்லை” என்று பாராட்டுகிறார். பிறரின் நற்பண்புகளை வெளிப்படையாகப் பாராட்டுவதும் நமது அன்பின் வெளிப்பாடாகும். எனவே, அன்பு நெஞ்சங்களே! நாம் பிறரிடமிருந்து பாராட்டை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், நாமும் பிறரை மனதாரப் பாராட்டக் கற்றுக்கொள்வோம். இதுவே அன்பின் ஒரு சிறந்த வடிவமாகும்.

இன்று “அங்கீகரித்தல்” என்ற சொல்லை நமது வாழ்வில் நடைமுறைக்குக் கொண்டு வருவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நல்ல பண்புகளையும் திறமைகளையும் கண்டறிந்து, அவர்களைப் பாராட்டுவோம். அவர்களின் வளர்ச்சிக்கு நமது வார்த்தைகள் ஊக்கமாக அமையட்டும். திரிகடுகம் எனும் மருந்து உடலுக்கு நன்மை செய்வதுபோல், அதன் கருத்துகள் நமது உள்ளத்தையும் பண்பையும் வளப்படுத்தட்டும்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக! மீண்டும் திரிகடுகம் நிகழ்வில் இணைந்து மகிழ்வோம். நன்றி!

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஆகஸ்ட் 2026, 12:18