திரிகடுகம்
பொறுமை – புதுமைக்கு அடித்தளம்
அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்
இன்று நாம் திருக்குறள் செய்யுள் எண் 963-ன் இரண்டாவது கருத்தை சிந்தித்துப் பார்க்கிறோம்:
“பிறர் தன்னைப் பேணுங்கால் நாணும்;
பிறர் திறன் வேறு கூறி குறையும்;
அறவினையை காராண்மை போல ஒழுகலும் –
ஊராண்மை என்னும் செருக்கு.”
இதில் நாம் குறிப்பாக “பிறர் திறன் வேறு கூறிக் குறையும்” என்ற கருத்தை ஆய்வு செய்வோம். நம்மை விரும்பாத ஒருவர், நம்முடைய வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை இல்லாத ஒருவர், அல்லது நம்மைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர், நம்மிடம் இருக்கும் பாராட்டுக்குரிய திறமைகளை மறைக்கலாம்; குறைத்து மதிப்பிடலாம்; அல்லது உண்மைக்கு மாறாகப் பேசலாம். அத்தகைய சூழலில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? அதற்கான பதில் பொறுமை. ஒருவர் நம்முடைய திறமையைப் பாராட்டவில்லை என்பதற்காக அந்தத் திறமை நம்மிடமிருந்து மறைந்துவிடாது. நம்முடைய சிறப்பும் திறமையும் அப்படியே இருக்கும்; மாறாக, நாம் தொடர்ந்து முயற்சி செய்தால் அது மேலும் வளரக்கூடும். ஆனால், பிறர் நம்மைப் பாராட்டவில்லை என்பதற்காக நாம் பொறுமையை இழந்து கோபத்துடன் செயல்பட்டால், நம்மிடம் இருக்கும் மற்ற சிறப்புகளும் மதிப்பிழந்து போகலாம்.
இறைவார்த்தையும் நமக்கு இதையே கற்றுக்கொடுக்கிறது: “தீமையை நன்மையால் வெல்லுங்கள்.” தீமையைத் தீமையால் வெல்ல முடியாது. அதுபோல, பொறாமையைப் பொறுமையால் வெல்ல வேண்டும். திருத்தூதர் பவுல் அன்பின் பண்புகளை எடுத்துரைக்கும்போது முதலில் கூறுவது: “அன்பு பொறுமையுள்ளது; அன்பு கனிவுள்ளது.” எனவே, உண்மையான அன்பின் அடித்தளமே பொறுமை. நான் திருக்கல்யாணம் பகுதியில் பணியாற்றிய காலத்தில், “பொறுமை புதுமைக்கு அடித்தளம்” என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தேன். நாம் ஒரு புதுமையை எதிர்பார்க்கும்போது, உடனடியாக அது நிகழ வேண்டும் என்று அவசரப்படக் கூடாது. பொறுமையுடன் காத்திருப்பதும் இறைநம்பிக்கையுடன் செயல்படுவதும் அவசியம்.
இதற்கு அழகான எடுத்துக்காட்டு கானாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு. அங்கு திராட்சை இரசம் குறைந்தபோது, அன்னை மரியா இயேசுவிடம் அந்தத் தேவையை எடுத்துரைத்தார். இயேசுவின் பதிலுக்குப் பிறகும், அவர் நம்பிக்கையையும் பொறுமையையும் இழக்கவில்லை. இறுதியில், இயேசு தமது முதல் அருங்குறியை அங்கு வெளிப்படுத்தினார். எனவே, அந்தப் புதுமையின் பின்னணியில் அன்னை மரியாவின் நம்பிக்கையும் பொறுமையும் இருந்தன. பொறுமையுடன் வாழ்பவர்கள் இந்தச் சமூகத்திற்கு எந்த இழப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, அவர்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உயர்வையும் அமைதியையும் கொண்டு வருகின்றனர். இன்று நாம் “மன்னிப்பு” என்ற சொல்லைப் பற்றியும் சிந்திக்கலாம். ஒருவர் நம்மை காயப்படுத்தும்போது, “மன்னித்துவிடுங்கள்” என்று சொல்வதைவிட, “பொறுத்தருளுங்கள்; நான் உங்களைப் பொறுத்துக்கொள்கிறேன்” என்ற மனப்பான்மை அன்பை வெளிப்படுத்துகிறது. ஏனெனில், உண்மையான அன்பு “அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்.”
எனவே, இன்று நாம் ஒரு சிறிய உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்: எப்போதும் பணிவுடன் இருப்போம். நம்முடைய திறமைகளை யாரும் பாராட்டவில்லை என்றாலும் மனம் தளரமாட்டோம். அதே நேரத்தில், பிறர் பாராட்டுக்குரியவர்களாக இருக்கும்போது பொறாமைப்படாமல், அவர்களின் திறமைகளை மனதாரப் பாராட்டுவோம். அவர்களின் உயர்வைக் கண்டு மகிழ்வோம். பொறுமையுடன் வாழ்வோம்; பொறாமையை வெல்வோம்; பிறரின் உயர்வில் மகிழ்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.