தேடுதல்

2026.07.24 hungry kids

காசா குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பில் தொடரும் நெருக்கடி: யுனிசெஃப் கவலை

காசாவில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தரமற்ற உணவுமுறை தொடர்ந்து கவலையளிப்பதாக யுனிசெஃப் மேற்கொண்ட புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12.2 விழுக்காட்டினர் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 4 விழுக்காட்டினர் அதிக உடல் எடையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

யுனிசெஃப் அமைப்பு காசாவின் அணுகக்கூடிய பகுதிகளில் மேற்கொண்ட புதிய யுனிசெஃப் 'ஸ்மார்ட்' (UNICEF SMART) என்ற ஊட்டச்சத்து குறித்த ஆய்வு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களிடையே நிலவும் சிக்கலான, கவலையளிக்கும் ஊட்டச்சத்து நிலைமையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மே 31 முதல் ஜூன் 15 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஐந்து வயதிற்குற்பட்ட குழந்தைகளில் 12.2 விழுக்காட்டினர் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 4 விழுக்காட்டினர் அதிக உடல் எடையுடன் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட மக்களிடையே தீவிர ஊட்டச்சத்து குறைபாடு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதிலும், தரமற்ற உணவு முறை இன்னும் பெரும் கவலையாகவே உள்ளது.

6 முதல் 23 மாதங்கள் வரையிலான குழந்தைகளில், 73 விழுக்காட்டினர் ஆய்வுக்கு முந்தைய நாளில் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டுள்ளனர்; வெறும் 22.4 விழுக்காட்டினர் மட்டுமே குறைந்தபட்ச அளவிலான ஏற்றுக்கொள்ளக்கூடிய நலமான உணவைப் பெற்றுள்ளனர்.

ஐந்து வயதிற்குற்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 37.1 விழுக்காட்டினர் ஆய்வு மேற்கொள்வதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 முதல் 49 வயதிற்குற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களிடையேயும் தாய்மைக்குரிய ஊட்டச்சத்து குறைபாடு பதிவாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்ற போர் நிறுத்தத்திற்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட மனிதநேய உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏறத்தாழ 17,000 ஆக இருந்த, தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3,000-க்கும் குறைவாகக் குறைந்துள்ளது என்று யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இந்த முன்னேற்றங்கள் இன்னமும் பலவீனமாகவே உள்ளன என்றும் தொடர்ச்சியான மனிதநேய உதவி, போதிய நிதி, குடிநீர், நலவாழ்வுப் பராமரிப்பு, சத்துள்ள உணவு மற்றும் சந்தைகள் திறக்கப்படுதல் ஆகியவற்றைச் சார்ந்தே முன்னேற்றங்கள் அமையும் என்றும் யுனிசெஃப் மாநில இயக்குனர் எடுவார்ட் பெக்பெடர் எச்சரித்துள்ளார்.

நிலைமை மோசமடைவதைத் தடுக்க, தடையற்ற மனிதநேய உதவி, எரிபொருள், தொடர்ச்சியான ஊட்டச்சத்து மற்றும் நலவாழ்வு சேவைகள் மற்றும் திறந்த வர்த்தக சந்தைகளுக்கு யுனிசெஃப் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

26 ஆகஸ்ட் 2026, 14:26