புதன் மறைக்கல்வியுரை- துறவுமட வாழ்வும் பரிந்துரைகளின் வல்லமையும்

நற்செய்தியை முதலில் ஏற்றுக்கொண்ட அர்மேனிய மக்களின் ஆழமான கிறிஸ்தவ பாரம்பரியத்தை உள்ளடக்கியதாக நரேக்கின் புனித கிரகரியின் எழுத்துக்கள் இருந்தன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நற்செய்தி அறிவிப்புக்கான பேரார்வம் என்பதில் விசுவாசிகளின் அப்போஸ்தலிக்க பற்றார்வம் என்ற தலைப்புடன் தன் புதன் பொது மறைக்கல்வி போதனையை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், சான்று பகர்தல் என்ற உபதலைப்பின் கீழ் துறவுமட வாழ்வும் பரிந்துரைகளின் வல்லமையும் என்ற தலைப்பில் மறைக்கல்விப் போதனையைத் துவக்கினார்.

முதலில், எசாயா நூலின் 53ஆம் பிரிவிலிருந்து ஒரு சிறு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

  • நேரியவராகிய என் ஊழியர்
  • தம் அறிவால்
  • பலரை நேர்மையாளராக்குவார்;
  • அவர்களின் தீச்செயல்களைத்
  • தாமே சுமந்து கொள்வார்.
  • 12ஆதலால், நான் அவருக்கு
  • மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; […]
  • ஏனெனில், […] கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;
  • ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;
  • கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.( எசா 53,11-12)

அதன்பின்னர் திருத்தந்தையின் கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்தது.

புதன் மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

அப்போஸ்தலிக்க பேரார்வம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, ஒவ்வொரு காலத்தின் புனிதர்களின் எடுத்துக்காட்டு குறித்து நோக்குவோம். முதலில் துறவுமட வாழ்வைத் தேர்ந்துகொண்டவர்கள் குறித்துக் காண்போம்.

ஏழ்மை, கற்புடைமை, கீழ்ப்படிதல் போன்றவைகளில் இயேசுவைப் பின்பற்றிய இவர்களின் வாழ்வு, நற்செய்தியைப் பரப்புதல் மற்றும் திருஅவை வளர்ச்சிக்கான பரிந்துரை இறைவேண்டலுடன் பின்னிப் பிணைந்திருந்தது. இன்று நாம், மத்திய காலத்தைச் சேர்ந்த அர்மேனிய துறவியும், திருஅவையின் இறைவல்லுநருமாகிய நரேக்கின் புனித கிரகரி குறித்து நோக்குவோம். நற்செய்தியை முதலில் ஏற்றுக்கொண்ட அர்மேனிய மக்களின் ஆழமான கிறிஸ்தவ பாரம்பரியத்தை உள்ளடக்கியதாக அவரின் எழுத்துக்கள் இருந்தன. தன் துறவுமட மறைவான வாழ்வில் புனித கிரகரி, முழு திருஅவையோடும், அனைத்து நாடுகளுக்கும் மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கும் திருஅவையின் மறைப்பணியோடும் ஆழமான ஒருமைப்பாட்டை உணர்ந்தவராயிருந்தார். பாவம் நிறைந்த மனிதகுலத்தோடு தன்னை அடையாளப்படுத்தியவராக, இயேசுவின் மன்னிப்பும் குணப்படுத்தலும் தேவைப்படும் பாவிகளுக்காகவும், மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் செபிப்பதற்கென தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். மனிதகுலமனைத்திற்கும் ஒப்புரவு, மீட்பு, மற்றும் அமைதியின் நற்செய்தியை எடுத்துரைக்கும் திருஅவையின் பணியில் நாமும் நம் பரிந்துரை செபத்தின் வழியாக ஒத்துழைக்க வேண்டிய  நம் கடமையை நமக்கு நினைவூட்டுவதாக நரேக்கின் புனித கிரகரியின் வாழ்வு எடுத்துக்காட்டு உள்ளது.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை, நற்செய்தி அறிவிப்புப்பணியிலும், பரிந்துரை செபத்தின் வழியாகவும்  உதவிய துறவுமட வாழ்வு குறித்து எடுத்துரைத்து அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2023, 11:25

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >