திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இயேசுவும் சமாரியப் பெண்ணும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்டோபர் 29 மாதத்தின் இறுதி புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு இயேசுவும் சமாரியப்பெண்ணும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
"நாம் வாழும் காலம்" என்று பொருள்படும் 'Nostra Aetate' என்ற திருஅவை ஏடு வெளியாகி 60 ஆண்டுகள் அக்டோபர் 28,செவ்வாயன்று நிறைவுற்றதை முன்னிட்டு அதனைக்குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை. முன்னதாக வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் நடுவே திறந்த காரில் வலம் வந்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், பீடப்பகுதியை வந்தடைந்ததும் சிலுவை அடையாளத்துடன் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்தார். அதன்பின் யோவான் நற்செய்தியில் உள்ள சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும் என்ற தலைப்பின் கீழ் உள்ள் இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால், நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களைத் திருப்பணிகளுக்கு வழங்கினார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, நம்பிக்கையின் திருப்பயணிகளே மற்றும் பல்வேறு மத மரபுகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.
மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பொது மறைக்கல்வி உரைக் கூட்டத்தில், சமாரியப் பெண்ணுக்கு நமதாணடவராகிய இயேசு வழங்கிய வார்த்தைகளை எடுத்துரைக்க விரும்புகிறேன். “கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” (யோவான் 4:24). என்ற நற்செய்தியின் வரிகள், அவர்களின் இந்த சந்திப்பு உண்மையான மத உரையாடலின் சாரத்தை வெளிப்படுத்துவதை எடுத்துரைக்கின்றது. மேலும் மக்கள் நேர்மையுடனும், கவனத்துடனும் செவிசாய்த்தல், நல்லிணக்க செறிவூட்டலுடனும் ஒருவருக்கொருவர் தங்கள் உள்ளத்தைத் திறக்கும்போது நிகழும் ஒரு பரிமாற்றமாகவும் இச்சந்திப்பு விளங்குகின்றது. இது தாகத்தால் பிறந்த ஓர் உரையாடல். மனித இதயத்திற்கான கடவுளின் தாகம் மற்றும் கடவுள் மீதான மனிதகுலத்தின் தாகம். சீகார் கிணற்றில், இயேசு கலாச்சாரம், பாலினம் மற்றும் மதத்தின் தடைகளை கடக்கிறார். வழிபாட்டைப் பற்றிய ஒரு புதிய புரிதலுக்கு அவர் சமாரியப் பெண்ணை அழைக்கிறார், இது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு "இந்த மலையிலோ அல்லது எருசலேமிலோ அல்ல" மாறாக ஆவியிலும் உண்மையிலும் உணரப்படுகிறது. இந்த தருணம் மதங்களுக்கு இடையேயான உரையாடலின் மையத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. எல்லா எல்லைகளுக்கும் அப்பால் கடவுளின் இருப்பைக் கண்டுபிடிப்பது மற்றும் பக்தியுடனும் பணிவுடனும் அவரைத் தேடுவதற்கான ஓர் அழைப்பு இது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1965ஆம் ஆண்டு அக்டோபர் 28, அன்று, இரண்டாவது வத்திக்கான் சங்கமானது, "நாம் வாழும் காலம்" என்று பொருள்படும் 'Nostra Aetate' என்ற திருஅவை பிரகடனத்தின் வழியாக, சந்திப்பு, மரியாதை மற்றும் ஆன்மீக விருந்தோம்பல் ஆகியவற்றின் புதிய எல்லைகளைத் திறந்தது. இந்த பிரகாசமான ஆவணம், மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களை அந்நியர்களாக அல்ல, மாறாக உண்மையின் பாதையில் சக பயணிகளாக சந்திக்கவும், நமது பொதுவான மனிதநேயத்தை உறுதிப்படுத்துவதன் வழியாக வேறுபாடுகளை மதிக்கவும், உண்மையான மதத் தேடலிலும், அனைத்து படைப்புகளையும் தழுவிய ஒரு தெய்வீக மறைபொருளின் பிரதிபலிப்பைக் கண்டறியவும் நமக்குக் கற்பிக்கிறது.
குறிப்பாக, 'Nostra Aetate' முதல் பார்வையானது யூத உலகத்தை நோக்கி இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது, அதனுடன் திருத்தந்தை புனித 23ஆம் யோவான் உண்மையான உறவை மீண்டும் நிறுவ விரும்பினார். திருஅவை வரலாற்றில் முதல்முறையாக, கிறிஸ்தவத்தின் யூத வேர்கள் பற்றிய ஒரு கோட்பாட்டு ஆய்வுக் கட்டுரை வடிவம் பெற இருந்தது, இது விவிலியம் மற்றும் இறையியல் மட்டத்தில் திரும்பப் பெற முடியாத ஒரு புள்ளியை எடுத்துரைக்கின்றது. "புதிய ஏற்பாட்டு மக்கள் ஆபிரகாமின் வழிமரபிற்கு ஆன்மிக ரீதியாகக் கட்டுப்பட்டவர்கள். கிறிஸ்துவின் திருஅவை, தனது நம்பிக்கையின் தொடக்கமும், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையும், மீட்பின் மறைபொருளின்படி, முற்கால தந்தையர்கள், மோசே, இறைவாக்கினர்கள் ஆகியோரிடம் ஏற்கனவே காணப்படுவதை அங்கீகரிக்கிறது". இவ்வாறு, திருஅவை, "யூதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாரம்பரியத்தை கவனத்தில் கொண்டு, அரசியல் நோக்கங்களால் அல்ல, ஆனால் நற்செய்தி அன்பினால் தூண்டப்பட்டு, எந்த நேரத்திலும் யாராலும் யூதர்களுக்கு எதிராக இயக்கப்பட்ட வெறுப்பு, துன்புறுத்தல்கள் மற்றும் யூத-விரோதத்தின் அனைத்து வெளிப்பாடுகளையும் கண்டிக்கிறது". அப்போதிருந்தே திருத்தந்தையர்கள் அனைவரும் யூத-விரோதத்தை தெளிவான வார்த்தைகளில் கண்டித்துள்ளனர். எனவே, திருஅவை யூத-விரோதத்தை பொறுத்துக்கொள்ளாது, நற்செய்தியின் அடிப்படையில் அதை எதிர்த்துப் போராடுகிறது என்பதை நானும் உறுதிப்படுத்துகிறேன்.
இந்த அறுபது ஆண்டுகளில், யூத-கத்தோலிக்க உரையாடலில் சாதிக்கப்பட்ட அனைத்தையும் இன்று நாம் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம். இது மனித முயற்சியால் மட்டுமல்ல, கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, உரையாடலாக இருக்கும் நமது கடவுளின் உதவியாலும் ஏற்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தவறான புரிதல்கள், சிரமங்கள் மற்றும் மோதல்கள் இருந்ததை நாம் மறுக்க முடியாது, ஆனால் இவை உரையாடல் தொடர்வதை ஒருபோதும் தடுக்கவில்லை. இன்றும் கூட, இதுவரை நிறைய சாதித்துள்ளதால். அரசியல் சூழ்நிலைகளும் சிலரின் அநீதிகளும் நம்மை நட்புறவிலிருந்து திசைதிருப்ப நாம் அனுமதிக்கக்கூடாது,
'Nostra Aetate' நோஸ்ட்ரா ஏட்டேட்டின் ஆற்றல் திருஅவையின் பாதையை தொடர்ந்து ஒளிரச் செய்கிறது. அனைத்து மதங்களும் "அனைத்து மனிதர்களையும் அறிவூட்டும் அந்த உண்மையின் கதிரை பிரதிபலிக்க முடியும் என்பதையும், மனித இருப்பின் பெரிய மறைபொருளுக்கான பதில்களைத் தேட முடியும் என்பதையும் அது அங்கீகரிக்கிறது, இதனால் உரையாடல் அறிவுசார் ரீதியாக மட்டுமல்ல, ஆழ்ந்த ஆன்மீக ரீதியாகவும் இருக்க வேண்டும். பிரகடனம் அனைத்து கத்தோலிக்கர்களையும், ஆயர்களையும், அருள்பணியாளர்களையும், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினரையும், மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களுடன் உரையாடலிலும் ஒத்துழைப்பிலும் உண்மையாக ஈடுபட அழைக்கிறது, அவர்களின் மரபுகளில் நல்லது, உண்மை மற்றும் புனிதமான அனைத்தையும் அங்கீகரித்து ஊக்குவிக்கிறது. மனித இயக்கத்தின் காரணமாக, நமது ஆன்மிக மற்றும் கலாச்சார வேறுபாடுகள் ஒன்றுக்கொன்று சந்தித்து சகோதரத்துவத்துடன் வாழ அழைக்கப்பட்ட உலகின் ஒவ்வொரு நகரத்திலும் இன்று இது அவசியம். உண்மையான உரையாடல் அன்பில் வேரூன்றியுள்ளது, இது அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்தின் ஒரே அடித்தளமாகும் என்பதை நோஸ்ட்ரா ஏடேட் நமக்கு நினைவூட்டுகிறது, அதே நேரத்தில் அனைத்து வகையான பாகுபாடு அல்லது துன்புறுத்தல்களையும் உறுதியாக நிராகரித்து, ஒவ்வொரு மனிதனின் சமமான மாண்பினையும் அது உறுதிப்படுத்துகிறது.
எனவே, அன்பான சகோதர சகோதரிகளே, நோஸ்ட்ரா ஏடேட்டின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் ஒன்றாக இணைந்து என்ன செய்ய முடியும்? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். அதற்கான பதில் எளிது. முன்னெப்போதையும் விட நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். நமது உலகிற்கு நமது ஒற்றுமை, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு தேவை. நமது ஒவ்வொரு மதமும் மனித துன்பங்களைத் தணிப்பதற்கும், நமது பொதுவான இல்லமாகிய நமது பூமியைப் பராமரிப்பதற்கும் பங்களிக்க முடியும்.
நமது மரபுகள் உண்மை, இரக்கம், நல்லிணக்கம், நீதி மற்றும் அமைதியைக் கற்பிக்கின்றன. எல்லா நேரங்களிலும் மனிதகுலத்திற்கான நமது சேவையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். கடவுளின் பெயர், மதம் மற்றும் உரையாடலை முறைகேடுகள் செய்வதற்கு எதிராகவும், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தால் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராகவும் செயல்படுத்த நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான வளர்ச்சியையும் நாம் கவனிக்க வேண்டும், ஏனெனில், மனிதர்களுக்கு மாற்றாக அவை கருதப்பட்டால், அது மனிதர்களின் எல்லையற்ற மாண்பினைத் தீவிரமாக மீறும் மற்றும் அவர்களின் அடிப்படை பொறுப்புகளை நடுநிலையாக்கும். அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தொழில்நுட்பத்தை மனிதமயமாக்குவதற்கும், அதன் ஒழுங்குமுறையை ஊக்குவிப்பதற்கும் நமது மரபுகள் மகத்தான பங்களிப்பைச் செய்கின்றன.
மனித இதயத்தில் அமைதி தொடங்குகிறது என்பதை நமது மதங்கள் கற்பிக்கின்றன என நம் அனைவருக்கும் தெரியும். இந்த அர்த்தத்தில், மதம் ஒரு அடிப்படை நிலையை வகிக்க முடியும். நமது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்கள், சுற்றுப்புறங்கள், பள்ளிகள், கிராமங்கள், நாடுகள் மற்றும் உலகிற்கான நம்பிக்கையை நாம் மீட்டெடுக்க வேண்டும். இந்த நம்பிக்கை, ஒரு புதிய உலகம் சாத்தியம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த நமது மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நோஸ்ட்ரா ஏடேட் உலகிற்கு நம்பிக்கையைக் கொண்டு வந்தது. இன்று, போரினால் பாதிக்கப்பட்ட நமது உலகத்திலும், சீரழிந்த இயற்கை சூழலிலும் அந்த நம்பிக்கையை மீண்டும் தூண்டுவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம், ஏனென்றால் நாம் ஒன்றுபட்டால், எதுவும் சாத்தியமாகும். எதுவும் நம்மைப் பிரிக்காமல் இருப்பதை உறுதி செய்வோம். இந்த உணர்வில், உங்கள் அனைவரின் உடனிருப்பிற்கும் நட்புறவிற்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம். ஏனென்றால் அதுவே உரையாடலின் உண்மையான தூண். இப்போது,ஒரு சில நிமிடங்கள் அமைதியில் செபத்தில் நிலைத்து நிற்போம். ஏனெனில் நமது செப மனநிலை, எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது.
இவ்வாறு திருத்தந்தை அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
