திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - மனித எதிர்நோக்கின் உயிருள்ள ஆதாரமாகிய உயிர்ப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்டோபர் 15, புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் இன்றைய உலகின் சவால்களும் என்ற நான்காவது பிரிவின் முதல் தலைப்பாக, மனித எதிர்நோக்கின் உயிருள்ள ஆதாரமாகிய உயிர்ப்பு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், மேடைப்பகுதியினை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரையினைத் துவக்கினார். அதன்பின் யோவான் நற்செய்தியில் இருந்து இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.
யோவான் 10: 7,9-10
மீண்டும் இயேசு கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்கள் மனித எதிர்நோக்கின் உயிருள்ள ஆதாரமாகிய உயிர்ப்பு என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரையினைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
யூபிலி ஆண்டின் மறைக்கல்வி உரையில், இதுவரை, நற்செய்திகளைப் பின்பற்றி இயேசுவின் வாழ்க்கை, அவரது பிறப்பு முதல் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் வரை, நாம் அறிந்து வந்துள்ளோம். இவ்வாறு செய்வதன் வழியாக நமது எதிர்நோக்கின் திருப்பயணமானது அதன் உறுதியான அடித்தளத்தை, பாதையைக் கண்டறிந்துள்ளது. இப்போது, நமது பயணத்தின் கடைசி பகுதியில், உயிர்த்தெழுதலில் உயர்வை அடையும் கிறிஸ்துவின் மறைபொருள், தற்போதைய மனித மற்றும் வரலாற்று எதார்த்தங்கள், அதன் கேள்விகள் மற்றும் சவால்களுடனான தொடர்பில் அதன் மீட்பின் ஒளியை நம் வாழ்வில் பிரகாசிக்க அனுமதிப்போம்.
நமது வாழ்க்கை எண்ணற்ற நிகழ்வுகளால் குறிக்கப்படுகிறது, பல்வேறு நுணுக்கங்கள் மற்றும் அனுபவங்கள் நிறைந்தது. சில நேரங்களில் நாம் நமது வாழ்வில் மகிழ்ச்சியாக உணர்கிறோம், மற்ற நேரங்களில் சோகமாக உணர்கிறோம், சில நேரங்களில் நிறைவு அடைகிறோம், அல்லது அழுத்தத்திற்குள்ளாக்கப்படுகிறோம், சில நேரங்களில் திருப்தி அடைகிறோம் அல்லது மனச்சோர்வடைகிறோம். நாம் பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், முடிவுகளை அடைவதில் கவனம் செலுத்துகிறோம், உயர்ந்த, மதிப்புமிக்க இலக்குகளை கூட அடைகிறோம். நாம் இடைநிறுத்தப்பட்டவர்களாக, நிலையற்றவர்களாக, மெதுவாக வரும் அல்லது வராத வெற்றிகள் மற்றும் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறோம். சுருக்கமாகக் கூறினால் நாம் ஒரு முரண்பாடான சூழ்நிலையையே அனுபவிக்கிறோம்: நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், ஆனால் நிழல்கள் இல்லாமல் தொடர்ந்து இருப்பது மிகவும் கடினம். நமது வரம்புகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம், அதே நேரத்தில், அவற்றைக் கடக்க முயற்சிக்கும் அடக்க முடியாத தூண்டுதலையும் கொண்டுள்ளோம். எப்போதும் ஏதோ ஒன்று காணாமல் போவதை போல நாம் ஆழமாக உணர்கிறோம்.
“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” என்று யோவான் நற்செய்தியில் இயேசு கூறியபடி (10:10) நாம் பற்றாக்குறைக்காக அல்ல, மாறாக முழுமையாக நிறைவான வாழ்க்கையை மிகுதியாக அனுபவிப்பதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம்.
நம்முடைய இதயத்தில் உள்ள ஆழ்மன ஆசையானது, பதவி, அதிகாரம்,உடைமைகளில் அல்ல, மாறாக மனிதகுலத்தின் இந்த அமைப்பு ரீதியான தூண்டுதலை உறுதி செய்யும் ஒருவர் இருக்கிறார் என்ற உறுதிப்பாட்டில் அதன் இறுதி பதிலைக் காண முடிகின்றது. இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமடையாது அல்லது தடைபடாது என்ற விழிப்புணர்வில் அதன் முடிவைக் காணலாம். இந்த உறுதிப்பாடானது எதிர்நோக்குடன் ஒத்துப்போகிறது. இது நம்பிக்கையுடன் சிந்திப்பதை அர்த்தப்படுத்துவதில்லை: அதிகப்படியான சிந்தனை பெரும்பாலும் நம்மை ஏமாற்றுகிறது, நமது எதிர்பார்ப்புகளை வெடிக்கச் செய்கிறது, அதே நேரத்தில் எதிர்நோக்கானது வாக்குறுதி அளித்து நிறைவேற்றுகிறது.
சகோதரிகளே, சகோதரர்களே, உயிர்த்தெழுந்த இயேசுவே இந்த வருகையின் வாக்குறுதி. அவர் நமது தாகத்தைத் தீர்த்து வைக்கும் ஆதாரம், தூய ஆவியார் நம் இதயங்களில் விதைக்கும் முழுமைக்கான எல்லையற்ற தாகம். உண்மையில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மனித வரலாற்றில் ஓர் எளிய நிகழ்வு அல்ல, மாறாக அதை உள்ளிருந்து மாற்றிய ஓர் நிகழ்வாகும்.
மனித வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் நீரைப் பற்றி நாம் சிந்திக்கலாம். அதன் பண்புகள் என்ன? அது உயிரினங்களை அனைத்திற்கும் புத்துணர்ச்சியூட்டுகிறது, பூமியையும் தாவரங்களையும் நீரால் நிரப்பி அவைகள் வறண்டுபோகாமல் வளமாகவும் உயிருடனும் இருக்க வைக்குகிறது. இது சோர்வடைந்த பயணிக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது, புத்துணர்ச்சியின் சோலையின் மகிழ்ச்சியை அவருக்கு வழங்குகிறது. ஓர் ஊற்று இயற்கைக்கும், உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் இலவச பரிசாகத் தோன்றுகிறது. ஏனெனில் நீர் இல்லாமல், ஒருவர் வாழ முடியாது.
உயிர்ப்பு என்பது ஒருபோதும் வறண்டு போகாத, ஒருபோதும் மாறாத வாழ்வின் ஊற்று. அது எப்போதும் தூய்மையாகவும், தாகம் கொண்ட எவருக்கும் வழங்க தயாராகவும் இருக்கின்றது. மேலும் கடவுளின் மறைபொருளை நாம் எவ்வளவு அதிகமாக ருசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக முழுமையாக திருப்தி அடைந்து நாம் அதன் மீது ஈர்க்கப்படுகிறோம்,. புனித அகஸ்டின், தனது பத்தாவது ஒப்புரவு அறிக்கைகள் என்ற புத்தகத்தில், நம் இதயங்களின் இந்த தீராத ஏக்கத்தைப் படம்பிடித்து, அதை தனது புகழ்பெற்ற பாடலில் வெளிப்படுத்துகிறார்: "நீ உன் நறுமணத்தைப் பொழிந்தாய், நான் உனக்காக சுவாசித்தேன், ஏங்கினேன், நான் ருசித்தேன், நான் பசியையும் தாகத்தையும் அனுபவித்தேன்; நீ என்னைத் தொட்டாய், உன் அமைதிக்கான ஆசையால் நான் எரிந்தேன்" (X, 27, 38) என்று கூறுகின்றார் புனித அகுஸ்தினார்.
இயேசு, தனது உயிர்த்தெழுதலின் வழியாக நமக்கு ஒரு நிரந்தர வாழ்க்கை அடிப்படையை உறுதி செய்துள்ளார்: அவர் உயிருள்ளவர், வாழ்க்கையை அன்பு செய்பவர், இறப்பு அனைத்தையும் வென்றவர். எனவே, அவர் நமது பூமிக்குரிய பயணத்தில் நமக்கு புத்துணர்ச்சியை வழங்கவும், நிலைவாழ்வில் பரிபூரண அமைதியை உறுதிப்படுத்தவும் முடியும். இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்த இயேசு மட்டுமே நமக்கு உண்மையில் ஓர் இலக்கு இருக்கிறதா? நம் இருப்புக்கு அர்த்தம் உள்ளதா? மேலும் பல அப்பாவி மக்களின் துன்பம் எவ்வாறு மீட்கப்படும்? என்பன போன்ற நம் இதயங்களின் ஆழமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
உயிர்த்தெழுந்த இயேசு "மேலிருந்து" ஒரு பதிலை அனுப்பவில்லை, ஆனால் இந்த பெரும்பாலும் கடினமான, வேதனையான மற்றும் மறைபொருளான பயணத்தில் நம் நண்பராக மாறுகிறார். நமது தாகம் தாங்க முடியாததாக மாறும்போது, அவரால் மட்டுமே நமது காலியான தண்ணீர் குவளையை நிரப்ப முடியும்.
மேலும் அவர் நமது பயணத்தின் இலக்காகவும் இருக்கிறார். அவரது அன்பு இல்லாமல், நமது வாழ்க்கைப் பயணம் ஒரு குறிக்கோள் இல்லாமல் அலைந்து திரிவது போன்றும், இலக்கைத் தவறவிட்ட ஒரு சோகமான நிகழ்வு போன்றும் மாறும். நாம் பலவீனமான உயிரினங்கள். தவறுகள் நமது மனிதகுலத்தின் ஒரு பகுதியாகும்; பாவத்தின் காயம்தான் நம்மை விழவும், கைவிடவும், விரக்தியடையவும் செய்கிறது. மறுபுறம், உயிர்த்தெழுதல் என்பதன் பொருள், நாம் எழுந்து நம் காலில் நிற்க உதவுகின்றது. உயிர்த்தெழுந்தவர் நம் வருகையை உறுதிசெய்கிறார், நம்மை அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார், அங்கு நாம் காத்திருக்கப்படுகிறோம், அன்பு செய்யப்படுகிறோம், மீட்கப்படுகிறோம்.
அன்புள்ள நண்பர்களே, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமது வாழ்க்கையின் சோர்வுகள் பல இருந்தபோதிலும், ஒரு ஆழமான மற்றும் மகிழ்ச்சியான அமைதியின் முன்னறிவிப்பைத் தரும் எதிர்நோக்கை நம்மில் உருவாக்குகிறது. நிலைவாழ்வில் அவர் மட்டுமே நமக்குக் கொடுக்கக்கூடிய அமைதியே அந்த எதிர்நோக்காகும்.
இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
