தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - மனித துயரத்தின் பதில், கிறிஸ்துவின் உயிர்ப்பு

சோகம் வாழ்க்கையின் அர்த்தத்தையும் மதிப்பையும் பறித்து, அதை ஒரு திசையற்ற மற்றும் அர்த்தமற்ற பயணமாக மாற்றுகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 22 புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மனித துயரத்திற்கான பதில், கிறிஸ்துவின் உயிர்ப்பு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ. இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற யூபிலி ஆண்டு தொடர் மறைக்கல்வியில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் இன்றைய உலகின் சவால்களும் என்ற நான்காவது பிரிவின் முதல் தலைப்பாக, மனித எதிர்நோக்கின் உயிருள்ள ஆதாரமாகிய உயிர்ப்பு என்ற தலைப்பில் கடந்த வாரம் தனது மறைக்கல்வி உரையினை வழங்கினார். இன்று அதன் இரண்டாம் பகுதியாக மனித துயரத்திற்கான பதில், கிறிஸ்துவின் உயிர்ப்பு என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு வழங்க வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ. உலகின் பல பகுதிகளிலிருந்து வந்து வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளைத் திறந்த வாகனத்தில் வலம்வந்தபடி வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் லூக்கா நற்செய்தியில் உள்ள எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல் என்ற பகுதியின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

லூக்கா 24: 32 -35

அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக் கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே!

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது ஒருவர் ஒருபோதும் சிந்தித்து தியானித்து முடிக்க முடியாத ஒரு நிகழ்வு, மேலும் ஒருவர் அதை எவ்வளவு அதிகமாக ஆராய்கின்றாரோ, அவ்வளவு அதிகமாக அவர் வியப்பால் ஆச்சர்யத்தால் நிரப்பப்படுகிறார், ஒரு மிகப்பெரிய ஆனால் கவரக்கூடிய ஒளியால் ஈர்க்கப்படுகிறார். அது வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியின் பூரிப்பாக வெளிப்படுகின்றது. எதார்த்தத்தின் அர்த்தத்தையே எதிர்மறையிலிருந்து நேர்மறையாக மாற்றுகின்றது. ஆனால் இந்த உயிர்ப்பானது ஒரு குறிப்பிடத்தக்க வழியில் நடக்கவில்லை, மாறாக மிகக் குறுகிய நேரத்தில் வன்முறையான ஒன்றாக, மெதுவாக, மறைக்கப்பட்ட ஒன்றாக நடந்தது என்று கூறலாம்.

கிறிஸ்துவின் உயிர்ப்பானது இன்றைய நம் காலத்தின் ஒரு நோயாகிய சோகம் வருத்தத்தை எவ்வாறு குணப்படுத்த முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம். ஊடுருவுகின்ற மற்றும் பரவலான சோகமானது பலரின் வாழ்நாள்களைக் கடத்திச்செல்கின்றது. நிலையற்ற உணர்வாக, சில நேரங்களில் ஆழ்ந்த விரக்தியாக, ஒருவரின் உள்மனத்தை ஆக்கிரமித்து மகிழ்ச்சிக்கான எந்த முயற்சியையும் விட மேலானது போல்  தோற்றம் அளிக்கிறது.

சோகம் வாழ்க்கையின் அர்த்தத்தையும் மதிப்பையும் பறித்து, அதை ஒரு திசையற்ற மற்றும் அர்த்தமற்ற பயணமாக மாற்றுகிறது. இந்த தற்போதைய அனுபவத்தை எம்மாவுவின் இரண்டு சீடர்களைப் பற்றிய லூக்காவின் நற்செய்திப் (24: 13-29) பதிவானது நமக்கு நினைவூட்டுகிறது. ஏமாற்றத்தால் நிறைந்து, ஊக்கம் இழந்த சீடர்கள், சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் மீது வைத்திருந்த நம்பிக்கைகளை விட்டுவிட்டு, எருசலேமை விட்டு வெளியேறுகிறார்கள். நற்செய்தியின் தொடக்கத்தில் அவர்கள் முகவாட்டத்தோடு இருந்ததாகக் கூறப்படும் வரிகளானது இதனை நமக்கு எடுத்துரைக்கின்றது. அளவுக்கதிகமான ஆற்றல் முதலீடு செய்யப்பட்ட குறிக்கோள்கள் அவர்களின் வாழ்க்கையின் சாராம்சமாகத் தோன்றியவைகள் அனைத்தும் அழிக்கப்பட்டதாக அவர்கள் உணருவது போன்று பிற பகுதிகள் எடுத்துரைக்கின்றன. நம்பிக்கை சிதைந்துவிட்டது. அனைத்தும் பாழடைந்து விட்டது போன்ற எண்ணம் அவர்களின் இதயங்களைப் பிடித்துள்ளது. வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடையில், ஒரு வியத்தகு நிகழ்வுகளின் வரிசையில், மிகக் குறுகிய காலத்திற்குள் எல்லாம் தங்கள் கையைவிட்டுப் போய் விட்டது போன்ற உணர்வு மேலோங்குகின்றது.

தோல்வி மனநிலையில் செல்லும் சீடர்களின் இந்த சோகமான பயணம், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல், ஒளியின் வெற்றி என இவை அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பாஸ்காவின் நாளில் நிகழ்கிறது. எம்மாவு நோக்கிப் பயணித்த இரண்டு மனிதர்களும் கோல்கொதாவை நோக்கித் தங்களது எண்ணங்களைத் திருப்புகின்றனர். சிலுவையின் பயங்கரமான காட்சி இன்னும் அவர்களின் கண்களிலும் இதயங்களிலும் பதிந்துள்ளது. எல்லாம் தொலைந்துவிட்டதாக அவர்களுக்குத் தெரிகிறது. அவர்கள் தங்கள் முன்னைய வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும், தங்களைப்பற்ரிய அடையாளத்தை வெளியிடாது, யாராலும் கண்டுபிடிக்கப்படாதவாறு வாழவேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கின்றனர்.

அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பயணி போன்று, அதாவது பாஸ்காப் பண்டிகைக்காக எருசலேமுக்குச் சென்ற பல திருப்பயணிகளில் ஒருவரைப் போன்று இரண்டு சீடர்களுடன் இணைகிறார் இயேசு. உயிர்த்த இயேசுவை அவர்களால் அடையாளம் காணவில்லை. சோகம், வருத்தம் அவர்களின் பார்வையை மறைத்தது. அந்த சோகம், குருவாகிய அவர் கொல்லப்படுவார், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று பலமுறை அளித்த வாக்குறுதியை அழித்துவிட்டது. அந்நியன் போல் நெருங்கி வந்து சீடர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க ஆர்வம் காட்டுகிறார் இயேசு. அவர்கள் இருவரும் முகவாட்டத்தோடு நின்றார்கள். (லூக் 24:17) என்று நற்செய்தி கூறுகிறது. இங்குப் பயன்படுத்தப்படும் கிரேக்க மூலச்சொல்லானது அனைத்தையும் உள்ளடக்கிய சோகம் என்று அதனை விவரிக்கிறது. அதாவது, ஆன்மாவின் முடக்கம் அவர்களின் முகங்களில் தெளிவாகத் தெரிகிறது.

இயேசு அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்கள் தங்களது ஏமாற்றத்தை பகிர்ந்து கொள்ள தங்கள் மனதிலிருந்து அதனை இறக்கி வைக்க அனுமதிக்கிறார். பின்னர், மிகுந்த வெளிப்படையாக, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்று கூறி அவர்களைக் கடிந்துகொள்கிறார் (வசனம் 25), மேலும் கிறிஸ்து பாடுபட வேண்டும், இறக்க வேண்டும், மீண்டும் உயிர்த்தெழுந்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கின்றார். இரண்டு சீடர்களின் இதயங்களிலும் நம்பிக்கையின் அரவணைப்பு மீண்டும் தூண்டப்படுகிறது, பின்னர், மாலை நேரம் வந்து விட அவர்கள் தங்கள் ஊரை நெருங்கி வரும் வேளையில், தங்களுடன் வந்த அந்த மர்மமான பயணத் தோழரை அவர்களுடன் தங்க அழைக்கிறார்கள்.

இயேசு அதை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் மேசையில் உணவருந்த அமர்கின்றார். “அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். (வச. 30-31). அவரின் அப்பம் பிட்கும் இச்செயல், இதயத்தின் கண்களை மீண்டும் திறக்கின்றது. விரக்தியால் மூடப்பட்ட பார்வையை மீண்டும் ஒளிரச் செய்கிறது. தங்களது பயணம், மென்மையான மற்றும் சக்திவாய்ந்த அவரது வார்த்தைகள், உண்மையின் ஒளி என எல்லாம் தெளிவாக தெரிகிறது. மகிழ்ச்சி மீண்டும் தூண்டப்படுகிறது. ஆற்றல் அவர்களின் சோர்வடைந்த கால்களில் மீண்டும் பாய்கிறது, நன்றியுணர்வு அவர்களின் நினைவுக்குத் திரும்புகிறது. மேலும் இருவரும் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் சொல்ல எருசலேமுக்குத் திரும்பிச் செல்கிறார்கள்.

“ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். (வ. 34). என்று கூறுகின்றனர். இந்த வினையுரிச்சொல்லில், உண்மையில், மனிதர்களாகிய நமது வரலாற்றின் உறுதியான விளைவு நிறைவேறுகிறது. இது உயிர்ப்பு நாளன்று கிறிஸ்தவர்கள் பரிமாறிக்கொள்ளும் வாழ்த்து என்பது தற்செயல் நிகழ்வு அல்ல என்பதை எடுத்துரைக்கின்றது. இயேசு வார்த்தைகளில் அல்ல, செயல்களில் உயிர்த்து எழுந்தார், அவரது உடல் அவரது பாடுகளின் அடையாளங்களைத் தாங்கி, நம் மீதான அவரது அன்பின் வற்றாத முத்திரையுடன் வெளிப்படுகின்றது. வாழ்க்கையின் வெற்றி என்பது ஒரு வெற்று வார்த்தை அல்ல, ஆனால் ஒரு உண்மையான, உறுதியான உண்மை என்பதைப் புலப்படுத்துகின்றது.

எம்மாவு சீடர்களின் எதிர்பாராத மகிழ்ச்சி, வாழ்க்கை கடினமாக இருக்கும்போது நமக்கு ஒரு மென்மையான நினைவூட்டலாக இருக்கட்டும். உயிர்த்தெழுந்த இயேசு நம் கண்ணோட்டத்தை தீவிரமாக மாற்றுகிறார், சோகத்தின் வெற்றிடத்தை நிரப்பும் நம்பிக்கையை விதைக்கிறார். இதயத்தின் பாதைகளில், உயிர்த்தெழுந்தவர் நம்முடன், நமக்காக நடந்து வருகிறார். நமது வாழ்வில் கல்வாரி இருள் இருந்தபோதிலும், மரணத்தின் தோல்விக்கு அவர் சான்றாக இருக்கிறார், வாழ்க்கையின் வெற்றியை உறுதிப்படுத்துகிறார். வரலாற்றில் இன்னும் நம்பிக்கைக்கு நிறைய நன்மை இருக்கிறது. உயிர்த்தெழுதலை அங்கீகரிப்பது என்பது உலகத்தைப் பற்றிய ஒருவரின் பார்வையை மாற்றுவதாகும். நம்மைக் காப்பாற்றிய, நம்மைக் காப்பாற்றும் உண்மையை அங்கீகரித்து ஒளிக்குத் திரும்புவதாகும். சகோதரிகளே, சகோதரர்களே, உயிர்த்தெழுந்த இயேசுவின் பாஸ்கா அற்புதத்தில் ஒவ்வொரு நாளும் விழிப்புடன் இருப்போம். அவர் மட்டுமே சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்!

இவ்வாறு திருத்தந்தை தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார். அனைவரும் எப்போதும் கிறிஸ்துவின் அன்பில் வளர்ந்து சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் அவருக்கு சான்றுள்ள வாழ்வைக் கொடுப்பார்கள் என்று நம்புவதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், அக்டோபர் மாதமானது திருஅவையின் மறைப்பணியில் நமது தீவிர ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நம்மை அழைக்கிறது என்றும் கூறினார்.

செபத்தின் பலத்தாலும், திருமண வாழ்க்கையின் ஆற்றலாலும், இளமையின் புதிய ஆற்றலாலும், ஒவ்வொருவரும் நற்செய்தியின் மறைப்பணியாளர்களாகி, மக்களின் நற்செய்தி அறிவிப்புக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுக்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 அக்டோபர் 2025, 13:22

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >