புதன் மறைக்கல்வியுரை - புனித Andrew Kim Taegonன் எடுத்துக்காட்டு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வம், விசுவாசியின் அப்போஸ்தலிக்க பற்றார்வம் என்ற தலைப்பில் தன் புதன் மறைக்கல்வி உரைகளில் சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், மே மாதம் 24 அன்று, தென் கொரிய புனிதர் Andrea Kim Taegon அவர்களின் சான்று வாழ்வு குறித்து, உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுடன் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். முதலில் மத்தேயு நற்செய்தி 10ஆம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது.
சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். […] நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.( மத் 10:24a-25, 27)
அதன்பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுகள் தொடர்ந்தன.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பற்றார்வம் குறித்த நம் மறைக்கல்வி போதனையின் தொடர்ச்சியாக இன்று, கொரிய மண்ணின் முதல் அருள்பணியாளரும், விசுவாசத்திற்காக மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவருமான புனித Andrew Kim Taegon குறித்து நோக்குவோம்.
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் கொரிய கிறிஸ்தவர்கள் மிகக்கொடுமையான முறையில் சித்ரவதைப்படுத்தப்பட்டனர். அந்த வேளையில், இயேசுவின் மீது விசுவாசம் கொண்டிருப்பது என்பது, மரணம்வரை கூடச் சென்று சான்றுபகர வேண்டிய ஒன்றாக இருந்தது. குறிப்பாக, புனித Andrew Kim அவர்களின் எடுத்துக்காட்டிலிருந்து வாழ்வின் ஆழமான இரு கூறுகளை நாம் கற்றுக்கொள்ளலாம். சித்ரவதைகளின் காலத்தில் மிக இரகசியமாக விசுவாசிகளைச் சென்று சந்தித்து வந்தார் இப்புனிதர். ‘நீர் இயேசுவின் சீடரா’ என்ற கேள்வியை ஒவ்வொரு விசுவாசியிடமும் கேட்டு அவர்களைத் தட்டி எழுப்பினார். ஒவ்வொருவரும் மறைப்பணியாளராகவும், சான்றுபகர்பவராகவும் வாழவேண்டிய தேவையை எடுத்துரைத்தார். நற்செய்தியை அதன் முழுமைத்தன்மையில் வாழும் ஒவ்வொரு மனிதனும் விசுவாசத்திற்கு சான்று பகர்பவராக வாழ்வதன் வழி, அவ்விசுவாசத்தை ஒருவருக்கொருவர் தொற்றும்தன்மையுடையதாக மாற்ற முடியும். இவ்வாறுதான், அதாவது, இங்குதான் நற்செய்தி அறிவிப்பிற்கான பேரார்வம் பிறக்கிறது. விசுவாசத்திற்காக சித்ரவதைகளை அனுபவிக்கும் காலத்தில், புனித Andrew Kim மற்றும் அவருடன் வாழ்ந்த கொரிய விசுவாசிகளின், நற்செய்திக்குச் சான்று பகர்ந்த வாழ்வு, விசுவாசத்தின் அதிகதிகக் கனிகளைக் கொணர்ந்தது.
அவர் வாழ்வு தரும் இரண்டாவது எடுத்துக்காட்டைத் தற்போது நோக்குவோம். அவர் குருமட மாணவராக இருந்தபோது, வெளிநாட்டிலிருந்து கொரியாவுக்கு வந்த மறைபோதகர்களை மிக இரகசியமாக வரவேற்றார். வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதை அரசு தடுத்துவந்த காலத்தில் புனித Andrew Kimன் இச்செயல் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ஒரு நாள் அவர் ஒன்றும் சாப்பிடாமல், பனி விழுதலுக்கு நடுவே நடந்துசென்றபோது, தள்ளாடி கீழே விழுந்தார். பனியால் உறைந்து போகவும், சுய நினைவை இழக்கவும் செல்லும் தறுவாயில், ‘எழுந்து நட’ என்ற குரலைக் கேட்டார். அக்குரலைக் கேட்டவுடன் தன் சுயநினைவுக்குத் திரும்பியவராக, ஒருவித நிழல் போன்ற கணநேரத் தோற்றம் தன்னை வழிநடத்துவதை உணர்ந்தார். நாம் எப்போதெல்லாம் விழுகிறோமோ, அப்போதெல்லாம் உறுதியுடன் எழவேண்டும் என்ற அப்போஸ்தலிக்க பேரார்வத்தின் முக்கிய கூறை இது உணர்த்தி நிற்கின்றது.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நாம் மனம் தளர வேண்டாம், நற்செய்தி அறிவிப்பு தரும் இனிய மகிழ்வை எவரும் பறித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டாம், இயேசு கிறிஸ்து நமக்குத் தரும் பலத்துடன் முன்னோக்கிச் செல்வோம்.
இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை கொரிய புனிதர் Andrew Kim அவர்களின் எடுத்துக்காட்டை முன்வைத்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெந்தகோஸ்து பெருவிழா நெருங்கிவரும் இவ்வேளையில், தூய ஆவியாரின் கொடைகளை அனைவரும் பெற செபிப்பதாக எடுத்துரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
