திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – வெற்றுக்கல்லறை
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 17, புதனன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இயேசுவின் இறப்பு நிகழ்வில் இடம்பெறும் வெற்றுக்கல்லறை பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மறைக்கல்வி உரைக் கூட்டத்தினை ஆரம்பித்ததும் யோவான் நற்செய்தியில் இயேசுவை அடக்கம் செய்தல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.
யோவான் 19: 41 - 42
இயேசு சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்கள் தனது கருத்துக்களை இறைமக்களுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்கள் இதோ.
அன்பான சகோதர சகோதரிகளே, நமது எதிர்நோக்காம் இயேசு என்னும் மறைக்கல்வி தொடரில் இன்று நாம் புனித சனிக்கிழமையின் மறைபொருளைப் பற்றி சிந்திக்க இருக்கின்றோம். மனுமகன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார். அவரது "இல்லாமை" ஒரு வெற்றிடம் அல்ல. அது எதிர்பார்ப்பு, கட்டுப்படுத்தப்பட்ட முழுமை, இருளில் வைக்கப்பட்ட ஒரு வாக்குறுதி. வானம் ஊமையாகவும், பூமி அசைவற்றதாகவும் தோன்றும் பெரும் அமைதியின் நாளில், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆழமான மர்மம் துல்லியமாக நிறைவேறுகின்றது. இக்கல்லறையானது, தனது வயிற்றில் கருவாக இருக்கும் உயிருள்ள குழந்தையை சுமக்கும் தாயின் கருவறையின் அமைதிக்கு சமமாகக் கருதப்படுகின்றது.
சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்ட இயேசுவின் உடல், விலைமதிப்பற்ற ஒன்றினைப் போல மிககவனமாக மூடப்படுகின்றது. நற்செய்தியாளர் யோவான், “அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை” (யோவான் 19:41) என்று எடுத்துரைக்கின்றார். எதுவும் அப்படியே விடப்படுவதில்லை அதற்கும் ஒரு காரணம் உண்டு என்பது இங்கு உறுதியாகிறது. அத்தோட்டமானது கடவுளும் மனிதனும் இணைந்திருந்த ஏதேன் தோட்டத்தினை நினைவூட்டுகின்றது. யாராலும் பயன்படுத்தப்படாத அந்த கல்லறை இன்னும் வராத ஒன்றைப் பற்றி அதாவது எதுவும் முடிவல்ல ஆரம்பம் என்பது பற்றி கூறுகின்றது. படைப்பின் தொடக்கத்தில், கடவுள் ஒரு தோட்டத்தை உருவாக்கினார். இப்போது புதிய படைப்பும் ஒரு தோட்டத்தில் தொடங்குகிறது. ஆம் விரைவில் திறக்கப்படும் ஒரு மூடிய கல்லறையுடன் ஆரம்பமாகின்றது.
புனித சனிக்கிழமையும் ஓய்வு நாளாகும். யூதச் சட்டத்தின்படி, ஏழாம் நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது. இந்த உலகைப் படைத்த பின் ஆறு நாட்களுக்குப் பிறகு, கடவுள் ஓய்வெடுத்தார் என்று காண்கின்றோம். இப்போது மகனும், தனது மீட்பின் வேலையை முடித்த பிறகு, ஓய்வெடுக்கிறார். அவர் சோர்வாக இருப்பதால் அல்ல, மாறாக அவர் தனது பணியை முடித்துவிட்டதால் ஓய்வெடுக்கின்றார். அவர் கைவிடப்பட்டதால் அல்ல, மாறாக அவர் இறுதிவரை அன்பு செய்ததால். இதற்கு மேல் சேர்க்க ஒன்றுமில்லை. இந்த ஓய்வு என்பது நிறைவேற்றப்பட்ட பணிக்கான முத்திரை, செய்யப்பட வேண்டியவை உண்மையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதற்கான உறுதிப்படுத்தல். இது இறைவனின் மறைக்கப்பட்ட பிரசன்னத்தால் நிரப்பப்பட்ட ஓய்வு.
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் நாம் நின்று ஓய்வெடுக்க சிரமப்படுகிறோம். வாழ்க்கை ஒருபோதும் நிறைவானதாக இல்லை என்பது போல் நாம் வாழ்கிறோம். இன்னும் அதிகமதிகமாக உற்பத்தி செய்வதற்காகவும், நம்மை யார் என்று நிரூபிக்கவும், இருக்கு இடத்தை விட்டுவிடாது இருக்கவும் நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எப்படி நம்மை நிறுத்துவது என்பதை அறிவது நம்பிக்கையின் செயலாகும், அதைச் செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நற்செய்தி நமக்குக் கற்பிக்கிறது. புனித சனிக்கிழமையானது, வாழ்க்கை எப்போதும் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக நம்மால் முடிந்ததை விட்டு வெளியேறுவது எப்படி என்பதைக் கண்டறிய நம்மை அழைக்கிறது.
கல்லறையில், தந்தையின் உயிருள்ள வார்த்தையான இயேசு அமைதியாக இருக்கிறார். ஆனால் துல்லியமாக அந்த மௌனத்தில்தான் புதிய வாழ்க்கையானது நிலத்தின் விதையைப் போலவும், இருள் மறைந்து ஒளி தரும் விடியற்காலையைப்போலவும் முளைக்கத் தொடங்குகிறது. கடவுள் கடந்த காலத்தைப் பற்றி பயப்படுவதில்லை, ஏனென்றால் அவர் காத்திருப்பின் இறைவனாகவும் இருக்கிறார். இவ்வாறு, நமது "பயனற்ற" நேரம், இடைநிறுத்தங்கள், வெற்றிடங்கள், மலட்டுத்தன்மையற்ற தருணங்கள் கூட உயிர்த்தெழுதலின் கருப்பையாக மாறும். வரவேற்கப்படும் ஒவ்வொரு மௌனமும் ஒரு புதிய வார்த்தையின் அடிப்படையாக இருக்கலாம். நாம் அதை கடவுளுக்கு வழங்கினால், ஒவ்வொரு நேரமும் அருளின் நேரமாக மாறும்.
பூமியில் புதைக்கப்பட்ட இயேசு, கடவுளின் சாந்தமான முகம் கொண்டவர். அவர் நமது செயல்களைச் செய்ய நம்மை அனுமதிப்பவர், நமக்காகக் காத்திருப்பவர், நம்மை சுதந்திரமாக விட்டுவிடுபவர். எல்லாம் முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும், நம்பிக்கைக் கொள்பவர் அவர். புனித சனிக்கிழமை நாளானது உயிர்ப்பை விரைவாக பெற்றுவிடவேண்டும் என்ற அவசரம் நமக்கு இருக்கக்கூடாது என்பதைக் கற்பிக்கின்றது. முதலில் நாம் அமைதியாக இருக்க வேண்டும், அமைதியை உள்ளங்களில் வரவேற்க வேண்டும், வரம்புகள், எல்லைகள் நம்மைத் தழுவிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். சில நேரங்களில் நாம் விரைவான பதில்களையும் உடனடி தீர்வுகளையும் தேடுகிறோம். ஆனால் கடவுள் நம் உள்ளத்தின் ஆழத்தில், மெதுவாக நம்பிக்கையின் நேரத்தில் செயல்படுகிறார். இயேசுவை அடக்கம் செய்யும் சனிக்கிழமையானது இவ்வாறு கருவறையாக மாறுகிறது, அதில் இருந்து வெல்ல முடியாத ஒளியின் சக்தியாக உயிர்ப்பின் ஆற்றல் உருவாகிறது.
அன்புள்ள நண்பர்களே, கிறிஸ்தவ எதிர்நோக்கு சத்தத்தில் பிறக்கவில்லை, மாறாக அன்பால் நிரப்பப்பட்ட காத்திருப்பின் அமைதியில் பிறக்கிறது. இது மகிழ்ச்சியின் மகள் அல்ல, ஆனால் கைவிடப்பட்ட நம்பிக்கையின் மகள். கன்னி மரியா தனது இந்த காத்திருப்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு ஆகியவற்றை நமக்குக் கற்பிக்கிறார். எல்லாம் ஸ்தம்பித்து நின்று விட்டதாக, நமது வாழ்க்கை ஓர் உடைந்த பாதையாகத் தோன்றும்போது, புனித சனிக்கிழமையை நினைவில் கொள்வோம். கல்லறையில் கூட, கடவுள் மிகப்பெரிய ஆச்சரியத்தை நமக்காக ஏற்பாடு செய்கிறார். இருந்ததை நன்றியுடன் வரவேற்கத் தெரிந்தால், துல்லியமாக சிறிய தன்மையிலும் மௌனத்திலும், கடவுள் எதார்த்தத்தை உருமாற்ற விரும்புகிறார், தனது அன்பின் உண்மையுடன் எல்லாவற்றையும் புதியதாக மாற்றுகிறார்.
இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
