திருத்தந்தை : அன்பு மற்றும் நம்பிக்கையின் செயல்களை ஆற்றுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நாம் வீழும்போதும், துயர்களை அனுபவிக்கும்போதும் நம்மைக் கைப்பிடித்து தூக்கிவிட நம் அருகில் இருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லும் அதேவேளை, அவர் மீது நம்பிக்கைக் கொண்டு அன்பு மற்றும் நம்பிக்கையின் செயல்களை ஆற்றுவோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபின் கடந்த வெள்ளிக்கிழமை, ஜூன் 16ஆம் தேதி வத்திக்கான் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மருத்துவமனையில் இருந்தபோது தனக்காக செபித்த அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார்.
குடலிறக்க அறுவை சிகிச்சைக் காரணமாக மருத்துவமனையில் இருந்ததால் கடந்த ஞாயிறு, ஜூன் 11 அன்று பொதுமக்களைச் சந்தித்து நண்பகல் மூவேளை செபவுரை வழங்க முடியாத நிலையில் இருந்த திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், இறையரசு குறித்து அறிவிக்க இயேசு தன் சீடர்களை அனுப்பிய நிகழ்வை எடுத்துரைத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இறைவன் நம் அருகில் இருக்கும்போது, நாம் இவ்வுலகில் தனிமையை உணரவோ, துயர வேளைகளில் நம்பிக்கையை இழக்கவோத் தேவையில்லை என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின் ஆண்டவர் நம் மத்தியில் இருப்பது, வாழ்வின் அடிப்படை உண்மை நிலையை எடுத்துரைப்பதாகும் என மேலும் இயம்பினார்.
தன் குழந்தையை கரங்களில் எடுத்து நடத்தும் ஒரு தந்தையைப்போல், இறைவன் நம் அருகில் இருப்பது மட்டுமல்ல, இவ்வுலகைக் குறித்து நமக்குக் கற்றுக் கொடுத்து நம்மை பாதுகாப்பாக உணரவைக்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் கடவுளுக்கு அருகாமையில் இருக்கும்போது, அச்சத்தை வெற்றிகொண்டு, அன்புக்கு நம்மைத் திறந்தவர்களாக, நன்மைத்தனத்தில் வளர்பவர்களாக, நற்செய்தியை எடுத்துரைக்க வேண்டிய தேவையையும் அதில் கிட்டும் மகிழ்வையும் உணர்கிறோம் என்ற திருத்தந்தை, அமைதியையும் மகிழ்வையும் தரவும் நம் இதயங்களை மாற்றியமைக்கவும் இறைத்தந்தையை நோக்கி செபிப்போம் என மேலும் கேட்டு தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவுச் செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்