தேடுதல்

இறைவன் இவ்வுலகில் செயலாற்றிக் கொண்டிருப்பதன் அடையாளங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவன் ஆற்றும் அரும்பெரும் செயல்களாலும், உலகை மௌனமாக மாற்றிவரும் நற்செயல்களாலும் நாம் வியப்படைய நம்மை அனுமதிப்போம் என ஜூலை 9, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவன் தன் அருஞ்செயல்களை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியது (மத் 11.25) குறித்து எடுத்துரைத்து, இறைவனின் அருஞ்செயல்கள் குறித்து நாம் வியப்படைகிறோமா, அல்லது அது குறித்து கவலையின்றி கடந்து செல்கிறோமா என்ற கேள்வியை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (மத் 11.5) என்று இயேசு கூறுபவை எல்லாம் இறைவன் இவ்வுலகில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளங்கள் என உரைத்தார் திருத்தந்தை.

மீட்பளிக்கும் தன் அன்பால் ஒவ்வொரு மனிதனையும் இறைவன் விடுவிக்கவும் குணப்படுத்தவும் செய்கிறார் என்பதை இந்த நற்செய்திப் பகுதி நமக்கு வெளிப்படுத்துகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அன்பு மற்றும் அருஞ்செயல்களின் மேன்மையை தற்பெருமை கொண்டிருக்கும் மற்றும் தங்கள் நலன் குறித்தே கவலைக் கொண்டிருக்கும் ஞானிகளும் அறிஞர்களும் புரிந்துகொள்வதில்லை என மேலும் கூறினார்.

முன்சார்பு எண்ணங்களும் தன்னலமும் இன்றி செயல்படும் இதயங்களைக் கொண்ட எளியோரே கடவுளின் அரும்பெரும் செயல்களையும் அன்பையும் புரிந்துகொள்ளமுடியும் என மேலும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வல்லச் செயல்களால் நாம் வியப்படைய நம்மை அனுமதிக்கும்போதெல்லாம் நல்ல செயல்கள் ஆற்ற வழிபிறக்கிறது என எடுத்தியம்பினார்.

இத்தகைய நல்ல செயல்கள் உலகை மௌனமாக மாற்றிவருகின்றன என்பதையும் கண்டு நாமும் ஒரு குழந்தையைப் போல் வியப்படைய நம்மை அனுமதிக்க வேண்டும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஜூலை 2023, 13:56

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >