தொடர்ந்து இறைவார்த்தையையும் நன்மைகளையும் விதைத்துச் செல்வோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பல வேளைகளில் சிரமமாகத் தோன்றினாலும், இயேசுவின் மாதிரிகையைப் பின்பற்றி தொடர்ந்து நன்மைகளை விதைத்துச் செல்வோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 16, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகமான விதை விதைப்பவன் உவமை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இறைவார்த்தையை விதைக்கும் பணியை ஒருபோதும் நிறுத்தவேண்டாம் என திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மனம் என்னும் நிலம் குறித்து தெளிவாகத் தெரிந்திருந்தும் நாம் கொடுக்கும் கனிகள் அபரிவிதமாக இருக்கும் எனற நம்பிக்கையிலேயே இயேசு விதைகளை நம்மில் விதைக்கிறார் என எடுத்துரைத்தார்.
இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வதோ அல்லது மறுப்பதோ என்ற சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருப்பினும் நம் இதயம் என்னும் நிலம் எப்போதும் நற்கனிகளை பெருமளவில் கொடுக்கும் என்ற அசையா நம்பிக்கையிலேயே இயேசு இறைவார்த்தை என்னும் விதைகளை விதைக்கிறார் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தாராளமனத்துடன் விதைகளை விதைக்கும் நல்விதைப்பவரான இயேசு, பாறைகள் நடுவிலும், முட்புதர்கள் நடுவிலும் அவ்விதைகள் விழுந்து வளரமுடியாத நிலைகள் உருவாகும் என்பதை அறிந்திருந்தும், நம் மனம் என்னும் நிலத்தின் செழுமையில் நம்பிக்கை வைத்து இயேசு தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
தங்கள் விசுவாசப் போதனைகளைச் செவிமடுக்காமல் செயல்படும் குழந்தைகள் குறித்து பெற்றோர் கவலை கொள்ளவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஒவ்வொரு குழந்தையிலும் விதைக்கப்பட்டுள்ள விதை, அதற்குரிய காலத்தில் வேர்விட்டு முளைக்கும் என்பதில் நம்பிக்கைக் கொள்வோம் என கேட்டுக்கொண்டார்.
விதைப்பவர் உவமையின் அடிப்படையில் இளையோரை நோக்கியும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் ஆற்றும் சிறிய உதவிகள் கூட விதையாக மாறி பெரும் கனிகளை வழங்க வல்லது என தெரிவித்தார்.
செபம், பிறருக்கு நெருக்கமாக இருத்தல், பிறர் பணிக்காக நேரம் ஒதுக்குதல் போன்றவை, நுகர்வுக்கலாச்சாரத்தின் வெறுமையிலிருந்து நம்மை காக்க வல்லவை என இளையோரை நோக்கிக் கூறினார் திருத்தந்தை.
அருள்பணியாளர்களும், துறவியரும், பொதுநிலையினரும், தங்களின் நற்செய்தி அறிவிப்புப் பணிகளின்போது, உடனடி பலன் கிட்டவில்லையெனினும், அதுகுறித்து சோர்வடையாமல் தொடர்ந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நம் முயற்சிகளையும் தாண்டி இறையரசு தூய ஆவியாரின் துணையுடன் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது என மேலும் கூறி தன் நண்பகல் மூவேளை செபவுரையை நிறைவுச் செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்