தேடுதல்

இறைவன் எப்போதும் உடன் நடக்கிறார் என்பதை உணர்வோம்

வாழ்க்கை நீரோட்டத்தின் துன்பவேளைகளில் எல்லாம் நம் அருகில் இருப்பதோடு, நம்மை நோக்கி, ‘அஞ்சவேண்டாம்’ என அழைப்புவிடுக்கிறார் இயேசு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நம் வாழ்வின் ஆபத்து நிறைந்த சுழல் நீரோட்டங்களில் நம்மை காக்கும் நோக்கத்தில் நம்முடன் இணைந்து நடைபோடும் இயேசு, நம்மை நோக்கி, ‘மனம் தளராதீர்கள், அஞ்ச வேண்டம்’, என உரைக்கிறார், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 13, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடல் சீற்றத்தால் கலங்கி தங்கள் படகில் அமர்ந்திருந்த சீடர்களை நோக்கி இயேசு கடலின் மீது நடந்து சென்ற காட்சியை விவரிக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவன் எப்போதும் உடன் நடக்கிறார் என்பதை மனதில் கொண்டவர்களாக, அஞ்சாமல் துணிவுடன் வாழ்வின் பொராட்டங்களை எதிர்த்துப் போராடுவோம் என திருப்பயணிகளை கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

நம் வாழ்வை அச்சுறுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் தீமைகள் மற்றும் பிரச்சனைகளை எவ்வாறு வெற்றிகொள்வது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத் தருகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணிவோடிருக்கவும் அஞ்சாதிருக்கவும், இயேசு தன் சீடர்களைப் பார்த்து விடுத்த அழைப்பு, அவர் நம் எதிரிகளை, அதாவது, மரணம், பாவம், தீயவன் என எதுவாக இருப்பினும் அவரின் காலில் இட்டு நசுக்குவதன் உறுதிப்பாட்டை தருவதாக உள்ளது என்றார்.

நம் துன்பவேளைகளில் நாம் கடவுளை நோக்கி கூக்குரலிடுகிறோம், ஆனால் அவரோ, வாழ்க்கை நீரோட்டத்தின் துன்பவேளைகளில் எல்லாம் நம் அருகில் இருப்பதோடு, நம்மை நோக்கி, ‘அஞ்சவேண்டாம்’ என அழைப்புவிடுக்கிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடல்மீது நடப்பதற்கான அழைப்பை ஏற்று நீரின்மீது நடந்த புனித பேதுரு, கடலில் மூழ்கவிருந்தவேளையில் இயேசுவை நோக்கி, ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் என கூக்குரலிட்டதைப்போல், நாமும், தீமைகள் மற்றும் அச்சங்களிலிருந்து நம்மை காக்கவல்ல இயேசுவை நோக்கி, நம்மைக் காக்கும்படி அழைப்பு விடுப்போம் என்றார் திருத்தந்தை.

கடல் சீற்றத்திலும், புயல்காற்றிலும் நம் வாழ்வுப் படகை செலுத்திக் கொண்டிருக்கும் நாமும் திருஅவையும் இயேசுவின் இருப்பிலும், உதவும் கரத்திலும் முழு நம்பிக்கைக் கொண்டு சிரமங்களை எதிர்கொள்ளவெண்டும் என்ற திருத்தந்தை, நம் துன்பவேளைகளில் இறைவன் நம்மை நோக்கி வருகிறார், நாமும் அவரை வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நம்மை அச்சம் மேற்கொள்ளும்போது, நாம் நம் பலத்தை நம்பி அதற்கு தனியாகவே தீர்வுகாண முயல்கிறோமா அல்லது இறைவனின் உதவியை நாடுகிறோமா என்பது குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம் என புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளை நோக்கி அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நமக்கு எதிராகச் செல்லும் சீற்ற அலைகள் மற்றும் புயலைக் காட்டிலும் இயேசு சக்தி நிறைந்தவர் என்பதை நாம் நம்புகிறோமா, நம் துன்பவேளைகளில் அவரை நோக்கி  நம் குரலை எழுப்புகிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஆகஸ்ட் 2023, 13:56

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >