தேடுதல்

சான்று பகர்தலே நற்செய்தி அறிவித்தலின் முதல் வழி

நற்செய்தி அறிவித்தல் என்பது முதலில், நற்செய்தி, மற்றும் அதன் மீட்பு உண்மை குறித்த நம் தனிப்பட்ட சான்று பகர்தலாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உரோம் நகரில் குளிர் காலம் ஓரளவு முடிவுக்கு வந்து இளவேனிற்காலம் துவங்கியுள்ளது. இலைகளைத் துறந்து, வறட்சியாகக் காட்சியளித்த மரங்கள் துளிர்விடத் துவக்கி பூ அரும்புகளுடன் காட்சியளிப்பது கண்ணுக்கு விருந்தாக உள்ளது. இத்தகைய ஓர் இரம்மியமான சூழலில், மார்ச் 22, புதன்கிழமையன்று, இதமான வெயிலில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருக்க, சான்று பகர்தலே நற்செய்தி அறிவித்தலின் முதல் வழி என்ற தலைப்பில் நற்செய்தி அறிவித்தலின் பேரார்வம் குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில், புனித பேதுருவின் முதல் திருமடலின் மூன்றாம் பிரிவின் இறைவசனங்கள் 8 மற்றும் 9 பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால், கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். (1 பேதுரு 3,8-9)

பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுத் தொடர்ந்தது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, மறைப்பணி பேரார்வம் குறித்த நம் புதன் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம், நவீன உலகில் நற்செய்தி அறிவிப்பது குறித்து புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் அப்போஸ்தலிக்க ஏடான  Evangelii Nuntiandiயில் கூறப்பட்டிருப்பது குறித்து சிந்திப்போம். நற்செய்தி அறிவித்தல் என்பது முதலில், நற்செய்தி, மற்றும் அதன் மீட்பு உண்மை குறித்த நம் தனிப்பட்ட சான்று பகர்தலாகும் என தன் அப்போஸ்தலிக்க ஏட்டில் கற்பிக்கிறார் புனித ஆறாம் பவுல். இதற்காகவே அவர், திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவரும் மூவொரு கடவுளில் உயிருள்ள விசுவாசம் கொண்டிருந்து, நாம் அறிவிக்கும் நற்செய்திக்கு இயைந்தவகையில் புனித வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறார். திருமுழுக்கில் நாம் பெற்ற தூய ஆவியார் எனும் கொடையில் தன் அடிப்படை ஆதாரத்தைக் கொண்டுள்ளது நம் புனித வாழ்வு. இந்த புனித வாழ்வே நமக்கேயுரிய நம்பிக்கையையும் புதிய வாழ்வையும் மற்றவர்களுடன் பகிர்வதற்கான ஆதாரமாக உள்ளது.

திருஅவை என்பது நற்செய்தியை அறிவிப்பதில் மட்டும் ஈடுபடுவதில்லை, மாறாக, தானும் நற்செய்தியைப் பெறுவதாகவும், தொடர்ந்து மனமாற்றலுக்கும் தூயஆவியானவரில் உள்மனமாற்றத்திற்கும் அழைப்புப் பெறுவதாகவும் உள்ளது.  நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபடும் ஒரு திருஅவை நம் மீட்பின் ஆதாரமாக இருக்கும் இறைவன் பக்கமே முற்றிலும் திரும்பியதாக, அதேவேளை உலகுடன் படைப்பாற்றலுடைய கலந்துரையாடல்களில் முழுமையாக ஈடுபடுவதாகவும், மனித குடும்பத்தின் ஒன்றிப்பு மற்றும் அமைதிக்கான இறைத்திட்டத்தில் ஒத்துழைப்பதாகவும் உள்ளது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று சிறப்பிக்கப்படும் உலக நீர் நாளையும், மார்ச் 25 வெள்ளியன்று திருஅவையில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா குறித்தும் நினைவூட்டினார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 மார்ச் 2023, 11:33

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >