தேடுதல்

புதன் மறைக்கல்வி - புனித பிரான்சிஸ் சேவியரின் கனவை நனவாக்கியவர்

நற்செய்தியை பண்பாட்டுமயமாக்குவதில் இந்நாட்களில் மத்தேயு ரிச்சி அவர்கள் நமக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வம், விசுவாசியின் அப்போஸ்தலிக்க பற்றார்வம் என்ற தலைப்பில் 15 வாரங்களாக தன் புதன் மறைக்கல்வி உரைகளில் சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், மே மாதத்தின் இறுதி நாளான 31ஆம் தேதியன்று, சீனாவில் நற்செய்தி அறிவிப்புப் பணிபுரிந்த இயேசுசபை மறைப்பணியாளர் வணக்கத்துக்குரிய  Matteo Ricci அவர்களின் சான்று வாழ்வு குறித்து எடுத்துரைத்தார். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தூய பேதுரு பெருங்கோவில் வளாகம் திருப்பயணிகளால் நிறைந்திருக்க, முதலில் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் 9ஆம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது.

நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். […] வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். (1 கொரி 9,19-20.22-23)

அதன் பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுகள் தொடர்ந்தன.

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பற்றார்வம் குறித்த நம் புதன் மறைக்கல்வியுரையில் இன்று, வணக்கத்துக்குரிய மத்தேயு ரிச்சி குறித்து நோக்குவோம்.

தூர கிழக்கு நாடுகளுக்கான துவக்க கால மறைப்போதகர்களுள் ஒருவரான மத்தேயு ரிச்சி அவர்கள், சீனாவுக்குள் நுழைந்து புனித பிரான்சிஸ் சேவியரின் கனவை நனவாக்கியவர். மிகக் கடினமாக இருந்த சீன மொழியைக் கற்றுத் தேர்ந்து, அந்நாட்டின் கலாச்சாரத்திற்குள் மூழ்கிப் போனார். சீன மொழியில் அவரின் எழுத்துக்களும், கணிதம் மற்றும் வானியலில் அவர் கொண்டிருந்த மேலான அறிவும், அவரை ஒரு மாமுனியாகவும் அதேவேளை பண்டிதராகவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வைத்து மதிக்கப்படவும் வைத்தது. தனது கற்றுத்தேர்ந்த மேலான அறிவையும், மற்றவர்களுடன் மதிப்புடன்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான தன் திறமையையும் நற்செய்திக்கானச் சேவையில் அவர் பயன்படுத்தினார். இது அவரின் எழுத்துக்களில் மட்டுமல்ல, அவரின் துறவு வாழ்வு, செபம் மற்றும் நற்பண்புகளில் வெளிப்படுத்தப்பட்டு அவரின் சீன நாட்டுச் சீடர்களை கவர்ந்து, அவர்கள் கத்தோலிக்க மறையைத் தழுவ வைத்தது. அந்நாட்டு நிலத்தில் அடக்கம் செய்யப்பட சீனப் பேரரசரால் அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் மத்தேயு ரிச்சி அவர்களே. நற்செய்தியை பண்பாட்டுமயமாக்குவதில் இந்நாட்களில் மத்தேயு ரிச்சி அவர்கள் நமக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருக்க முடியும். மக்களிடையே அமைதியையும் உடன்பிறந்த உணர்வு நிலையையும் உருவாக்குவதற்குமான பணியில், சீனாவுக்கும் திருஅவைக்கும் இடையே உறவுநிலைகளை வலுப்படுத்துவதற்கும், கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரங்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் மத்தேயு ரிச்சி அவர்கள் நமக்கு தூண்டுகோலாகவும் உள்ளார்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இங்கிலாந்து, மால்ட்டா, நைஜீரியா, இந்தோனேசியா, மலேசியா, அமெரிக்கிய ஐக்கிய நாடு ஆகியவைகளில் இருந்து வந்திருந்த ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள் உடபட, அங்கு பங்குபெற்ற அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2023, 10:56

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >