மனுவுரு எடுத்ததில் இயேசுவின் பேரன்பு வெளிப்படுகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இறைமகன் விண்ணகத்திற்கு எழுந்துச் சென்ற திருவிழாவன்று, மனிதகுலத்தை இயேசு வானகத்திற்கு எடுத்துச் சென்றதுடன், நாம் வானுலகில் இறைத்தந்தையின் குழந்தைகளாக என்றென்றும் வாழ்வதற்கான வழியைத் திறந்துள்ளார் என ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 21, ஞாயிற்றுக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இயேசு விண்ணகத்திற்கு எழுந்துச் சென்ற திருவிழாவையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு இவ்வுலகை விட்டு மேலெழும்பிச் சென்றதை நாம் ஏன் கொண்டாடுகிறோம், அவர் தற்போது என்னச் செய்து கொண்டிருக்கிறார் என்ற இரு கருத்துக்கள் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
மண்ணில் மனுவுரு எடுத்த இறைமகன் அதே உருவுடன் இறைத்தந்தையை நோக்கிச் சென்றதன்வழி, நம் மனித குலத்தையும் விண்ணகம் நோக்கி எடுத்துச் சென்றுள்ளார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனுவுரு எடுத்ததில் அவரின் பேரன்பு வெளிப்படுகிறது என்றார்.
விண்ணகத்திற்கு ஏறிச் சென்ற இறைமகன் இயேசு, இறைத்தந்தையின் அருகில் அமர்ந்துகொண்டு நமக்காக என்றும் பரிந்துரை செய்துகொண்டேயிருக்கிறார் என்ற திருத்தந்தை, இதன்வழி இறைமகன் இயேசு எப்போதும் நம்மருகிலேயே இருக்கிறார் என மேலும் கூறினார்.
இறைத்தந்தையின் முன்னிலையில் நமக்காக இயேசு தொடர்ந்து பரிந்துரைச் செய்துகொண்டிருப்பதால், நாம் நம்பிக்கை இழக்காமலும், மனம்தளராமலும இருக்க நம் விசுவாசம் நமக்கு உதவுகிறது என எடுத்துரைத்து, அன்னைமரியின் பரிந்துரையையும் வேண்டி தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்