தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - புனித Mary MacKillop

ஸ்காட்லாந்திலிருந்து குடியேறிய பெற்றோரின் மகளாகிய புனித Mary MacKillop, ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் ஏழ்மையில் வாடிய குழந்தைகளின் கல்வித் தேவை குறித்து தெளிந்துணர்ந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வம், விசுவாசியின் அப்போஸ்தலிக்க பற்றார்வம் என்ற தலைப்பில் மறைக்கல்வித்தொடரை புதன்கிழமைகளில் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் 17ஆவது தொடராக ஜூன் 28, புதனன்று, புனித Mary MacKillop அவர்களின் சாட்சிய வாழ்வு குறித்து எடுத்துரைத்தார். ஜூன் 07ஆம் தேதி புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் குடலிறக்க அறுவைச் சிகிச்சைத் தொடர்பாக ஜெமெல்லி மருத்துவமனைச் சென்ற திருத்தந்தை, அறுவை சிகிச்சை முடிந்து நல்ல உடல் நலத்துடன் ஜூன் 16 வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார். கடந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இப்புதனன்று, அதாவது இருவார இடைவெளிக்குப்பின்  நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வம், விசுவாசியின் அப்போஸ்தலிக்க பற்றார்வம் என்ற தொடரின் 17வது பகுதியை வழங்கினார்.   முதலில், மாற்கு நற்செய்தி 9ஆம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். பிறகு, அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்றார். (மாற்கு 9,33.35-37)

அதன்பின் திருத்தந்தையின் கருத்துப் பகிர்வுகள் தொடர்ந்தன.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பற்றார்வம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் நற்செய்தியை அறிவிப்பதற்கென பல்வேறு காலங்களில் தங்களை அர்ப்பணித்துச் சேவையாற்றியவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டுகள் குறித்துச் சிந்தித்து வருகிறோம்.  இன்று நாம் தொலைதூர ஓசியானியா கண்டத்தின் மிகப்பெரிய கல்வியாளரும், திருஇதயத்தின் புனித யோசேப்பின் சகோதரிகள் சபையைத் தோற்றுவித்தவருமான  புனித Mary MacKillop அவர்கள் குறித்து நோக்குவோம். ஸ்காட்லாந்திலிருந்து குடியேறிய பெற்றோரின் மகளாகிய இவர், ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில்  ஏழ்மையில் வாடிய குழந்தைகளின் கல்வித்தேவை குறித்து தெளிந்துணர்ந்தார்.  தன் துறவுசபையின் சகோதரிகளோடு இணைந்து ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களைத் துவக்கி இளையோரின் நல்உருவாக்கலில் கவனம் செலுத்தினார். தன் அப்போஸ்தலிக்கப் பணியில் அவர் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளை, சிலுவையின் வல்லமையிலும் இறைபராமரிப்பிலும் அவர் வைத்திருந்த நம்பிக்கையின் துணைகொண்டு வெற்றிகண்டார். அவர் காலத்தைய திருஅவையின் தேவைகளுக்கு அவர் பதிலளித்து சேவையாற்றியதற்கு இறைவனுக்கு நன்றியுரைக்கும் அதேவேளை, அவரின் பணியார்வம், இக்காலப் பெற்றோருக்கும், மறைஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பெரும் தூண்டுதலாக இருப்பதாக. இப்புனிதரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இளையோரின் உருவாக்கல்களுக்கு நாம் அனைவரும் உதவுவோமாக.

இவ்வாறு, இவ்வார புதன் மறைக்கல்விப் போதனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2023, 11:36

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >