தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - குழந்தை இயேசுவின் திரெசா

திருஅவையின் நற்செய்தி அறிவித்தல் பணிக்கு உதவும் நோக்கத்தில் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதை இளவயதிலேயேக் கண்டுணர்ந்தார் புனித குழந்தை திரேசா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வம், விசுவாசியின் அப்போஸ்தலிக்க பற்றார்வம் என்ற தலைப்பில் மறைக்கல்வித்தொடரை புதன்கிழமைகளில் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் 16ஆவது வாரமான ஜூன் 7, புதனன்று, மறைப்பணியாளர்களின் பாதுகாவலரான குழந்தை இயேசுவின் திரெசா குறித்து எடுத்துரைத்தார். இப்புதனன்று பிற்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு குடலிறக்க அறுவைச் சிகிச்சை இடம்பெறப்போவது ஏற்கனவே மருத்துவக் குழுவால் முடிவுச் செய்யப்பட்டிருந்தபோதிலும், காலையில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு தன் மறைக்கல்வியுரையை வழங்கினார். முதலில், லூக்கா நற்செய்தி 15ஆம் பிரிவு எடுத்துரைக்கும் காணாமற்போன ஆடு பற்றிய உவமை பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

அப்போது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில், காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். (லூக் 15,4-7)

இப்பகுதி வாசித்தளிக்கப்பட்டபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்களின் சாட்சிய வாழ்வு என்ற தலைப்பில் புனித குழந்தை திரேசா குறித்த தன் சிந்தனைகளை அங்கு குழுமியிருந்த திருப்பயணிகளோடு பகிர்ந்துகொண்டார்.

மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பற்றார்வம் குறித்த நம் மறைக்கல்வியுரையின் தொடர்ச்சியாக இன்று,  மறைப்பணிகளின் அனைத்துலக பாதுகாவலரான Lisieuxன் புனித குழந்தை திரேசா குறித்து நோக்குவோம். அவரின் புனிதப் பொருட்கள் இன்று நம் மத்தியில் இருப்பது மகிழ்ச்சி தரும் ஒன்றாக உள்ளது. குழந்தை திரேசா தன் இளவயதிலேயே கார்மல் துறவு சபையில் இணைவதற்கு தனக்கிருக்கும் இறைஅழைத்தலை தெளிவாகக் கண்டுணர்ந்தார். அதுமட்டுமல்ல, திருஅவையின் நற்செய்தி அறிவித்தல் பணிக்கு உதவும் நோக்கத்தில் தான் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதையும் கண்டுணர்ந்தார். தன்னை ஓர் ஆன்மீக உடன்பிறப்பாக முன்னிறுத்தி, பல வெளிநாட்டு மறைபோதகர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கும் கடிதங்களை அனுப்பி அவர்களை உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டார். செபங்கள் மற்றும் தினசரி தியாகங்கள் வழியாக அவரின் ஊக்கமும் ஆதரவும் இருந்தது. அனைத்து மக்களும் இயேசுவின் மீட்பளிக்கும் அன்பிற்கு தங்கள் இதயங்களைத் திறந்துச் செயல்படவேண்டும் என்ற தீராத ஏக்கத்தைக் கொண்டவராக அவர் செயல்பட்டார். பாவிகளின், அதிலும் குறிப்பாக மிகவும் கடின இதயத்தைக் கொண்ட பாவிகளின் மனந்திரும்பலுக்காக இறைவனை நோக்கி வேண்டினார். இந்த பரிந்துரைப்பணியை தான் இறந்தபின்னரும் தொடர்வதாக தான் நோய்வாய்ப்பட்டிருந்த இறுதி நாட்களில் வாக்குறுதியளித்தார் குழந்தை திரேசா. திட்டமிடல்கள் மற்றும் திட்டச்செயல்பாடுகளை விட பிறரன்பும் பரிந்துரைச் செபங்களும் நற்செய்தி அறிவித்தலுக்கு முக்கியமானவை எனதை புனித குழந்தை திரேசா நமக்கு நினைவுறுத்தி நிற்கிறார். இன்றைய திருஅவையின்மீது மறைப்பணி பேரார்வத்தை பொழிந்தருள பரிந்துரைக்குமாறு குழந்தை திரேசா அவர்களிடம் நாம் கேட்போம். இதன் வழியாக இயேசுவின் பெயர் எங்கும் அறியப்பட்டு அன்புகூரப்படுவதாக.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை அனைவருக்கும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2023, 08:52

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >