இக்காலத்தின் இறைவாக்கினர்களை வரவேற்கவேண்டியதன் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
எந்த ஒரு முடிவையும் எடுக்க முயலும்போது, செபித்து, தூய ஆவியாருக்கு அழைப்புவிடுப்பதுடன், மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்குச் செவிமடுக்கும் ஆவலை நாம் கொண்டிருக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை இரண்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் முவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசக வார்த்தைகளின் ஒரு பகுதியான, “இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார்” (மத் 10:41) என்பதை மையமாக வைத்து தன் உரையை வழங்கினார்.
இக்காலத்தின் இறைவாக்கினர்களை வரவேற்கவேண்டிய தேவை குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்கள், ஏனெனில் திருமுழுக்கு வழியாக நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர் பணி என்னும் கொடையைப் பெற்றுள்ளோம் என மேலும் கூறினார்
தூய ஆவியாரின் செயல்பாட்டின் கீழ் இருக்கும் நிகழ்காலத்தை அறிந்து கொள்ளவும், கடவுளின் திட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு இயைந்தவகையில் நடக்கவும் மற்றவர்களுக்கு உதவுபவரே இறைவக்கினர் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவாக்கினர் என்பவர், இயேசுவை பிறருக்கு சுட்டிக்காட்டுபவர், இயேசுவுக்கு சான்றுபகர்பவர், நிகழ்காலத்தை வாழ உதவுபவர் மற்றும், இறைத்திட்டத்திற்கு ஏற்ப வருங்காலத்தைக் கட்டியெழுப்ப உதவுபவர் என உரைத்த திருத்தந்தை, இறைவாக்கினர்களாகவும் இயேசுவின் சாட்சிகளாகவும் இருக்கும் நாம் மற்றவர்களின் வாழ்வில் இறைவனின் ஒளியைக் கொணரும்பொருட்டு இயேசுவுக்குச் சாட்சியாக வாழ்கின்றோமா என்ற கேள்வியை நமக்குள்ளேயேக் கேட்போம் எனவும் விசுவாசிகளை விண்ணபித்தார்.
கடவுளின் செய்தியைத் தாங்கிச் செல்பவர்களாக ஒவ்வொருவரையும் அவர்களின் அழைப்பிற்கு இயைந்தவகையில் வரவேற்று அவர்களுக்கு செவிமடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் செபித்து, தூய ஆவியாரின் துணையை நாடுவதுடன், மற்றவர்களுக்கு செவிமடுக்க முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் நம்மால் வரவேற்கப்படுபவர்களாக உணரவைக்கப்படவேண்டும், ஏனெனில், ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒரு கொடை என மேலும் கூறினார்.
இவ்வாறு, நாம் மற்றவர்களுக்குச் செவிமடுக்கவும், அவர்களைப் புரிந்துகொள்ளவும் முன்வரும்போது, எத்தனையோ மோதல்கள் தவிர்க்கப்பட்டு, அமைதியான தீர்வுகள் காணப்படமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்