தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – காதுகேளாதவர் நலம்பெறுதல்

மாற்கு நற்செய்தியில் உள்ள காதுகேளாதவர் நலம்பெறுதல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் குறித்த தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கஸ்தல்கந்தல்போவில் தனது கோடை விடுமுறையைச் செலவழித்து வத்திக்கான் திரும்பி இருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இன்று ஜூலை 30, புதன்கிழமை மீண்டும் தனது தொடர் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு என்னும் தொடர் மறைக்கல்வி உரையின்கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்து வரும் திருத்தந்தை அவர்கள் இன்று மாற்கு நற்செய்தியில் உள்ள காதுகேளாதவர் நலம்பெறுதல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் குறித்த தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.

திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இணைய வழியில் மறைப்பணியாற்றுவோர்க்கான யூபிலி மற்றும் இளைஞர்களுக்கான யூபிலியை முன்னிட்டு உலகெங்கிலும் இருந்து ஏராளமான மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர். ஏறக்குறைய ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்த வத்திக்கான் வளாகத்தில் திறந்த காரில் வலம் வந்தபடி மக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் பீடப்பகுதியை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்தார். அதன்பின் மாற்கு நற்செய்தியில் உள்ள காதுகேளாதவர் நலம்பெறுதல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள் இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.    

மாற்கு 7: 32 - 37

காது கேளாதவர் நலம்பெறுதல்

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள்.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரையினைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

இந்த வார மறைக்கல்வி உரையுடன், சந்திப்புகள், உவமைகள் மற்றும் குணப்படுத்துதல்களால் நிறைந்த இயேசுவின் பொது வாழ்க்கைப் பயணத்தை நாம் நிறைவு செய்ய இருக்கின்றோம். நாம் வாழும் காலத்தில் நமக்குக் குணப்படுத்துதல் மிகவும் தேவை. மனித மாண்பை அவமதிக்கின்ற வன்முறை மற்றும் வெறுப்பு நிறைந்த சூழலால் நமது உலகமானது ஊடுருவியுள்ளது. சமூக ஊடக இணைப்புகளால் (*புலிமியா" - அளவுக்கதிகமாக உண்ணும் நோய்) நோய்வாய்ப்பட்டு வரும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். நாம் அளவுக்கதிகமாக ஊடகத்தால் இணைக்கப்பட்டுள்ளோம், சில சமயங்களில் தவறான அல்லது சிதைக்கப்பட்ட படங்களால் தாக்கப்படுகிறோம். முரண்பாடான உணர்ச்சிகளைப் பொங்கி எழச்செய்யும் பல செய்திகளால் நமக்குள் நாம் மூழ்கடிக்கப்படுகிறோம்.

இந்த சூழ்நிலையில், எல்லாவற்றையும் நிறுத்தி விட வேண்டும், இனி எதையும் கேட்க வேண்டாம் என்ற விருப்பத்தை நம்முள் நாம் உணரலாம். நம் வார்த்தைகள் கூட தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் ஏற்படலாம். நாம் எவ்வளவு அருகருகே நெருக்கமாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் எளிமையான மற்றும் மிகவும் ஆழமான விஷயங்களை சொல்ல முடியாத, ஒரு தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அமைதியாக நம்மை நாமே மூடிக்கொள்ளவும் விரும்பலாம்.

மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் காதுகேளாதவர் நலம்பெறுதல் பகுதியானது நமது இச்சூழலை எடுத்துரைக்கின்றது. காதுகேளாத அம்மனிதர், தான் புரிந்து கொள்ளப்படாததால் பேசுவதை நிறுத்தவும், தான் ஏற்கனவே கேட்டவற்றால் ஏமாற்றமடைந்து காயமடைந்ததால், மற்றவரின் குரல்களைக் கேட்காமல் இருக்கவும் முடிவு செய்திருக்கலாம். இயேசுவிடம் குணம் பெற அவர் செல்லவில்லை, மாறாக மற்றவர்களால் இயேசுவிடம் அவர் கொண்டு வரப்படுகிறார். அவர் தனிமையாக இருந்ததைப் பற்றி கவலைப்பட்ட அவரை சுற்றி இருந்தவர்கள் அவரை தலைவராம் இயேசுவிடம் கொண்டு வருகின்றார்கள் என்பதை நமக்கு இச்செயல் நினைவூட்டுகின்றது. ஒவ்வொரு மனிதரும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கவேண்டும் என்று நினைக்கும் கத்தோலிக்க திருஅவையின் உருவத்தை இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது. மற்ற குரல்கள் கடவுளின் குரலை மூழ்கடிக்கும் சூழல் உள்ள பிற இனத்தார் வாழும் பகுதியில் இந்நிகழ்வானது நடைபெறுகிறது.

இயேசுவின் செயலானது நமக்கு முதலில் வித்தியாசமாகத் தோன்றலாம். ஏனென்றால் அவர் இந்த நபரை தனியாக அழைத்துச்செல்கின்றார். இது அவரது தனிமைப்படுத்துதலை மேலும் அதிகப்படுத்துவது போலத் தெரிகிறது, ஆனால் கூர்ந்து கவனித்தால், அந்த மனிதரின் அமைதி மற்றும் பின்வாங்கலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், உடனிருப்பு மற்றும் நெருக்கமே அவரது தேவை என்பதை இயேசு புரிந்துகொண்டார் என்பதை எடுத்துரைக்கவும் இச்செயல் நிகழ்த்தப்படுகின்றது.

ஓர் ஆழமான சந்திப்பை எடுத்துரைக்கும் அடையாளச் செயல்கள் வழியாக இயேசு முதலில் அவருக்கு ஓர் உடனிருப்பின் அமைதியை வழங்குகிறார். அந்த மனிதரின் காதுகளையும் நாவைத் தொடுகிறார். அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை, ஆனால் அதே நேரத்தில் சொல்ல வேண்டிய விடயத்தை “திறக்கப்படு” என்ற வார்த்தையில் எடுத்துரைக்கின்றார். மாற்கு இந்த வார்த்தையை அராமிக் மொழியில் “எப்பத்தா” என்று கூறுகிறார். இந்த எளிய மற்றும் அழகான வார்த்தையின் வழியாக, கேட்பதையும் பேசுவதையும் நிறுத்திய அந்த மனிதனுக்கு இயேசு அழைப்பு விடுக்கின்றார். "உன்னைப் பயமுறுத்தும் இந்த உலகத்திற்கு உன்னைத் திறந்துகொள்! உன்னை ஏமாற்றிய உறவுகளுக்கு உன்னைத் திறந்துகொள்! நீ கைவிட்ட வாழ்க்கைக்குத் உன்னைத் திறந்துகொள்! உன்னை மூடுவது ஒருபோதும் ஒரு தீர்வாகாது இயேசு அவனிடம் சொல்வது போல் இருக்கிறது இவ்வழைப்பு.

இயேசுவைச் சந்தித்த பிறகு, உடனே அம்மனிதரின் காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார் என்று நற்செய்தி எடுத்துரைக்கின்றது. அந்த நபர் மீண்டும் பேசத் தொடங்குவது மட்டுமல்லாமல், தெளிவாகப் பேசினார் என்று எடுத்துரைக்கும் வினையுரிச்சொல்லானது, அவரது அமைதிக்கான காரணங்களைப் பற்றி மேலும் சிலவற்றை நமக்குச் சொல்வது போல் தெரிகிறது. ஒருவேளை இம்மனிதர், தான் தவறாகப் பேசுகின்றோம் என்று உணர்ந்ததால், போதுமானவற்றைப் பேசுவதாக உணர்ந்ததால் அவர் பேசுவதை நிறுத்தி இருக்கலாம். நாமும் பல நேரங்களில் பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதையும், சரியாக புரிந்து கொள்ளப்படாததையும் அனுபவிக்கிறோம். திறம்பட செயல்படுவது மட்டுமல்லாமல், நம் வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்துவதைத் தவிர்க்கவும், நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறையை குணப்படுத்தவும் இறைவனிடம் அருள் கேட்க வேண்டும்.

தெளிவாக பேசுதல் என்பது ஒரு பயணத்தின் தொடக்கமாகும், மாறாக அது நிறைவின் புள்ளி அல்ல. இயேசுவை உண்மையிலேயே அறிய, நாம் ஒரு பாதையில் அவருடன் இருக்க வேண்டும், அவருடைய பாடுகளின் வழியாகச் செல்ல வேண்டும். அவர் பட்ட அவமானம், துன்பம் ஆகியவற்றை நாம் பார்த்திருந்தால், அவருடைய சிலுவையின் மீட்பின் ஆற்றலை அனுபவிப்போம். அப்போது தான் நாம் அவரை உண்மையிலேயே அறிந்திருக்கிறோம் என்று சொல்லலாம். ஏனெனில் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்கு எந்த குறுக்குவழிகளும் இல்லை.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, நேர்மையாகவும் விவேகமாகவும் ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளக் கற்றுக்கொடுக்கும்படி கடவுளிடம் கேட்போம். மற்றவர்களின் வார்த்தைகளால் காயமடைந்த அனைவருக்காகவும் செபிப்போம். இயேசுவிடம் மக்களைக் கொண்டுவரும் பணியில் திருஅவை ஒருபோதும் தோல்வியடையக்கூடாது என்றும், அதனால் மக்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன் வழியாகக் குணமடைந்து, அவருடைய மீட்பின் செய்தியைத் தாங்குபவர்களாக மாற வேண்டும் என்றும் செபிப்போம்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களைத் திருத்தந்தை அவர்கள் நிறைவு செய்ததும், கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார். மோதல்கள், வன்முறை மற்றும் போரினால் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிக்க வேண்டுகோள் விடுத்தார்.

ஜூலை 26-27 இரவு காங்கோ ஜனநாயகக் குடியரசின் கோமண்டாவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக் கொண்ட திருத்தந்தை அவர்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆலயத்திலும் அவர்களது வீடுகளிலும் செப வழிபாட்டுப் பவனியின்போது கொல்லப்பட்டனர் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை கடவுளின் அன்பான இரக்கத்தில் ஒப்படைத்து, காயமடைந்தவர்களுக்காகவும், வன்முறை மற்றும் துன்புறுத்தலைத் தொடர்ந்து அனுபவிக்கும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்காகவும் தொடர்ந்து செபிக்கவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள் உள்ளூர் மற்றும் பன்னாட்டுப் பொறுப்புகளைக் கொண்டவர்கள் இதேபோன்ற துயரங்களைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜூலை 2025, 11:21

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >