திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இறந்தோர் உலகம் சென்ற இயேசு
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 24 புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இயேசு அடக்கம் செய்யப்பட்ட புனித சனிக்கிழமை நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ. சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை அவர்கள் மறைக்கல்வி உரையினைத் துவக்கியதும் திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமடலில் நீதியின் பொருட்டுத் துன்புறுதல் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
1 பேதுரு 3: 18-19
கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கருத்துக்களை திருப்பயணிகளிடத்தில் பகிர்ந்துகொண்டார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்று நாம் புனித சனிக்கிழமையின் மறைபொருளைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க இருக்கின்றோம். எல்லாம் அமைதியாகவும் அசைவற்றதாகவும் தோன்றும் பாஸ்கா மறைபொருளின் நாளில், கண்ணுக்குத் தெரியாத மீட்பின் செயலானது நடைபெறுகிறது. இருளிலும் மரண நிழலிலும் இருந்த அனைவருக்கும் உயிர்த்தெழுதல் செய்தியைக் கொண்டு வர கிறிஸ்து இறந்தவர்களின் உலகிற்கு இறங்குகிறார்.
திருவழிபாட்டு முறை மற்றும் பாரம்பரியத்தால் நமக்குக் கொடுக்கப்பட்ட இந்நிகழ்வு, மனிதகுலத்தின் மீதான கடவுளது அன்பின் மிகவும் ஆழமான மற்றும் தீவிரமான அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறது. உண்மையில், இயேசு நமக்காக இறந்தார் என்று சொல்வதோ அல்லது நம்புவதோ மட்டும் போதாது. மாறாக, நாம் தொலைந்து போன இடங்களில் நம்மைத் தேடி அங்கீகரித்த, அவருடைய அன்பின் நம்பகத்தன்மையை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இருளின் எல்லைக்குள் ஊடுருவக்கூடிய ஓர் ஒளியின் ஆற்றல் நிறைந்த அவரின் அன்பினால் மட்டுமே அந்த நிலையை நாம் அடைய முடியும்.
திருவிவிலியத்தின் கருத்தில், பாதாள உலகம் என்பது இருத்தலியலுக்கான நிலையான இடம் அல்ல என்று கூறப்படுகின்றது. வாழ்க்கை பலவீனமடைந்து துயரம், தனிமை, குற்ற உணர்வு மற்றும் கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிரிவினை ஆட்சி செய்யும் நிலை அந்த உலகில் காணப்படுகின்றது. இந்த இருளாகிய அரசின் வாயில்களைக் கடந்து, கிறிஸ்து அந்தப் படுகுழியில் கூட நம்மை வந்து அடைகிறார். சொல்லப்போனால், அவர் இறப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். அந்த வீட்டிலிருந்து நம்மை வெளியேற்ற அவ்விடத்தை வெறுமையாக்க, அங்குள்ள அதன் குடிமக்களை விடுவிக்க, அவர்களை ஒவ்வொருவராக கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார். அவரது செயலானது நமது பாவத்திற்கு முன்பாக நிற்காத, மனிதர்களின் தீவிர நிராகரிப்புக்கு அஞ்சாத ஒரு கடவுளின் மனத்தாழ்மையைச் சுட்டிக்காட்டுகின்றது.
இன்று, நாம் வாசிக்கக்கேட்ட தனது திருத்தூதர் பேதுருவின் முதல் திருமடலின் சிறிய பகுதியில், “தூய ஆவியாரால் உயிர்ப்பிக்கப்பட்ட இயேசு, காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்” என்று நமக்குச் சொல்கிறார் (1 பேதுரு 3:19). இது மிகவும் நெகிழ்ச்சியான உருவங்களில் ஒன்றாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்செய்திகளில் அல்ல, மாறாக நிக்கோதேமஸின் நற்செய்தி என்று அழைக்கப்படும் ஒரு அபோக்ரிபல் உரையில் இந்நிகழ்வுக் காணப்படுகிறது. இம்மரபின்படி, கடவுளின் திருமகன் தனது சகோதர சகோதரிகளில் கடைசிவரை நிற்க, அங்கும் கூட தனது ஒளியைக் கொண்டுவர அடர்ந்த இருளுக்குள் நுழைந்தார். இந்த செயலானது இறப்பு ஒருபோதும் கடைசி வார்த்தை அல்ல. அது உயிர்ப்பின் அறிவிப்பின் அனைத்து ஆற்றலையும் மென்மையையும் உள்ளடக்கியது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
அன்பான நண்பர்களே, கிறிஸ்துவின் இந்த நிலை கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அது தொடுகிறது. பாதாள உலகம் என்பது இறந்தவர்களின் நிலை மட்டுமல்ல, தீமை மற்றும் பாவத்தால் இறப்பை அனுபவிப்பவர்களின் நிலையும் கூட. தனிமை, அவமானம், கைவிடுதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தின் அன்றாட நரகமாகவும் அது விளங்குகின்றது. தந்தையின் அன்பிற்கு சாட்சியாக கிறிஸ்து இந்த இருண்ட எதார்த்தங்கள் அனைத்திலும் நுழைகிறார். தீர்ப்பளிப்பதற்காக அல்ல, மாறாக விடுதலை செய்வதற்காக. குற்றம் சாற்றுவதற்காக அல்ல, மாறாக, காப்பாற்றுவதற்காக. ஆறுதல் மற்றும் உதவி வழங்க மருத்துவமனை அறைக்குள் நுழையும் ஒருவரைப் போல, அவர் அமைதியாக, அவ்வாறு செய்கிறார்.
திருஅவை தந்தையர்கள், மிகச்சிறந்த அழகான திருஅவையின் பக்கங்களில், இந்த தருணத்தை ஒரு சந்திப்பு என்று விவரித்துள்ளனர். அதாவது அது கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்கும் இடையிலான சந்திப்பு. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான அனைத்து சாத்தியமான சந்திப்புகளின் அடையாளமாக இருக்கும் ஒரு சந்திப்பு என்று கூறியுள்ளனர். மனிதன் அச்சத்தால் தன்னை மறைத்துக் கொண்ட இடத்திற்கு இறைவன் இறங்கி, அவனைப் பெயர் சொல்லி அழைத்து, அவன் கரங்களைப் பிடித்து, அவனை உயர்த்தி, மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். அவர் முழு அதிகாரத்துடன், ஆனால் எல்லையற்ற மென்மையுடனும், தான் இனி அன்பு செய்யப்படப்போவதில்லை என்று அஞ்சும் ஒரு குழந்தையின் ஒரு தந்தையைப் போல இதைச் செய்கிறார்.
கிழக்கத்திய திருஅவைகளின் நினைவுச்சின்னங்களில் உயிர்த்தெழுதலின்போது, கிறிஸ்து நரகத்தின் வாயில்களை உடைத்து, தனது கைகளை நீட்டி, ஆதாம் மற்றும் ஏவாளின் மணிக்கட்டுகளைப் பிடித்துக் கொண்டு இருப்பது போல சித்தரிக்கப்படுகிறார். அவர் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளவில்லை, அவர் தனியாக தன் வாழ்க்கைக்குத் திரும்பவில்லை, மாறாக அனைத்து மனிதகுலத்தையும் தன்னுடன் ஈர்க்கிறார். இது உயிர்த்தெழுந்தவரின் உண்மையான மகிமை. இது அன்பின் ஆற்றல். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பாத ஒரு கடவுளின் ஒன்றிப்பு. அவர் நம் துயரங்களைத் தழுவி, ஒரு புதிய வாழ்க்கைக்கு நம்மை உயர்த்தும் வரை மீண்டும் உயிர்த்தெழாத கடவுள் அவர் என்பதை இறந்தோர் உலகத்திற்கு இறங்கி வந்த அவரது செயல் எடுத்துரைக்கின்றது.
புனித சனிக்கிழமை என்பது, விண்ணுலகம் மண்ணுலகத்தை மிகவும் ஆழமாகப் பார்வையிடும் நாள். மனித வரலாற்றின் ஒவ்வொரு மூலையும் உயிர்ப்பின் ஒளியால் தொடப்படும் நேரம் இது. கிறிஸ்து அவ்வளவு தூரம் இறங்க முடிந்தால், அவரது மீட்பிலிருந்து எதையும் விலக்க முடியாது. நமது துயரமான இரவுகள், பழைய தவறுகள், உடைந்த பிணைப்புகள், பாதிப்படைந்த கடந்த காலம், இரக்கத்தால் தொட முடியாத அளவுக்கு இணக்கம் செய்யப்பட்ட வரலாறு என எதையும் மீட்பிலிருந்து விலக்க முடியாது.
அன்பான சகோதர சகோதரிகளே, கடவுளுக்காக இறங்குவது என்பது ஒரு தோல்வி அல்ல, மாறாக அவரது அன்பின் நிறைவேற்றம். இது ஒரு தோல்வி அல்ல, மாறாக எந்த இடமும் மிகத் தொலைவில் இல்லை, எந்த இதயமும் மூடப்பட்டிருக்கவில்லை, எந்த கல்லறையும் அவரது அன்பிற்கு மிகத் தடையாக இல்லை என்பதை அவர் நமக்குக் காட்டும் விதம். இது நமக்கு ஆறுதல் அளிக்கிறது, நம்மைத் தாங்குகிறது. சில சமயங்களில் நாம் பாறைக்கு அடியில் விழுந்துவிட்டதாகத் தோன்றினாலும் கூட அந்த இடத்திலிருந்துதான் கடவுள் ஒரு புதிய படைப்பைத் தொடங்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புதிய படைப்பானது உயர்த்தப்பட்ட மக்கள், மன்னிக்கப்பட்ட இதயங்கள், வறண்ட கண்ணீர் ஆகியவற்றால் ஆன ஒரு படைப்பு. புனித சனிக்கிழமை என்பது கிறிஸ்து தனது மீட்பின் திட்டத்தில் அதை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக அனைத்து படைப்புகளையும் தந்தையிடம் வழங்கும் அமைதியான அரவணைப்பு ஆகும்.
இவ்வாறு திருத்தந்தை அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை. நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
