தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை - கிறிஸ்தவ உள்ளுணர்வு

செப்டம்பர் 27, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மறைக்கல்வியாளர்களுக்கு கிறிஸ்தவ உள்ளுணர்வு குறித்தக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உள்ளுணர்வு என்பது வரவிருக்கும் இறையரசு பற்றிய எளியவர்களின் உணர்வாகும் என்றும், கடவுளின் கனவுகளை உள்ளுணர்ந்து பணியாற்றுவதற்கு நற்செய்தியின்படி எளிய மனம் கொண்டவர்களாக மாற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 27, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியின் பங்கேற்பாளர்களுக்கு கிறிஸ்தவ உள்ளுணர்வு குறித்தக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

லூக்கா நற்செய்தியில் தந்தையும் மகனும் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், எதிர்நோக்கு என்பது உள்ளுணர்வு என்ற மிலான் உயர்மறைமாவட்ட ஆயர் அம்புரோஸின் வரிகளை மையப்படுத்தி தனது கருத்துக்களை மறைக்கல்வியாளர்களுக்கு வழங்கினார்.

லூக்கா 10: 21-22

தந்தையும் மகனும்

அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைச் சுருக்கம்

அன்புள்ள சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

யூபிலி ஆண்டு நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றுகின்றது. ஏனென்றால் நம்மையும் முழு பூமியையும் பற்றிய புதுப்பித்தலுக்கான ஒரு பெரிய தேவையை உள்ளூணர்வை நாம் யூபிலி ஆண்டின் வழியாகவே உணர்கிறோம்.

"நாம் உள்ளுணர்வு பெறுகின்றோம்” என்ற வினைச்சொல்லானது தூய ஆவியின் இயக்கத்தை விவரிக்கிறது. சிறியவர்களிடம், அதாவது, தாழ்மையான மனப்பான்மை கொண்ட மக்களிடம் இயேசு கண்டறிந்த இதயத்தின் அறிவாற்றலை எடுத்துரைக்கின்றது. கற்றறிந்தவர்கள் சிறிதளவு உள்ளுணர்வையே உணர்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் எல்லாம் அறிந்திருப்பதாகக் கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, நம் மனதிலும் இதயத்திலும் கடவுள் தன்னை வெளிப்படுத்த முடியும் என்று எண்ணுவதற்கான இடம் இருப்பது இன்னும் அழகானது. இறைமக்களில் புதிய உள்ளுணர்வுகள் பிறக்கும்போது எதிர்நோக்கு உண்டாகிறது.

இயேசு மகிழ்ச்சியடைகிறார், தூய ஆவியால் பேருவகை அடைகின்றார், ஏனென்றால் சிறியவர்கள் உள்ளுணர்வதை அவர் காண்கிறார். கடவுள் விடயங்களைப் பற்றிய "ஆறாவது அறிவு" என்னும் sensus fidei அவர்களுக்கு உள்ளது.

மக்களின் உள்ளுணர்வு திறனிலிருந்து எதிர்நோக்கு எவ்வாறு வர முடியும் என்பதைக் காட்டும் திருஅவை வரலாற்றில் ஒரு நிகழ்வை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். நான்காம் நூற்றாண்டில், மிலானில், தலத்திருஅவையானது பெரும் மோதல்களால் பாதிக்கப்பட்டது. புதிய ஆயரைத் தேர்ந்தெடுப்பது ஓர் உண்மையான சலசலப்பாக மாறிக்கொண்டிருந்தது. அரசு அதிகாரியான ஆளுநர் அம்புரோஸ் தலையிட்டு, செவிசாய்க்கின்ற மற்றும் சமரசம் செய்யும் தனது சிறந்த திறனுடன் அச்சூழலுக்கு அமைதியைக் கொண்டு வந்தார். அப்போது ஒரு குழந்தையின் குரல், “ஆயர் அம்புரோஸ்” என்று கூச்சலிட்டதாக வரலாறு கூறுகிறது, உடனே அங்குக் குழுமியிருந்த எல்லா மக்களும் இணைந்து “ ஆயர் அம்புரோஸ்” என்று கூச்சலிட்டனர்.

அம்புரோஸ் திருமுழுக்கு அருளடையாளம் கூட பெறவில்லை; திருமுழுக்கு பெற தயாராகிக்கொண்டிருந்தார். இருப்பினும், மக்கள் அந்த மனிதரிடம் ஆழமான ஒன்றை உணர்ந்து அவரை ஆயராகத் தேர்ந்தெடுத்தனர். இதனால், திருஅவை அதன் மிகச்சிறந்த ஆயர்களில் ஒருவரைப் பெற்றது மற்றும் திருச்சபையின் வல்லுனராகவும் அவரைக் கொண்டாடியது.

முதலில், ஆயர் அம்புரோஸ் அந்தப் பதவியை ஏற்க விரும்பவில்லை, பின்னர் அது கடவுளிடமிருந்து வந்த அழைப்பு என்பதை அவர் புரிந்துகொண்டார், எனவே அவர் திருமுழுக்கு பெற்று ஆயராக நியமிக்கப்பட தன்னை அனுமதித்தார். மேலும் அவர் ஓர் ஆயராக மாறுவதன் வழியாக ஒரு கிறிஸ்தவரானார்! சிறியவர்கள் திருஅவைக்கு எவ்வளவு பெரிய பரிசினைக் கொடுத்தார்கள் என்று பார்த்தீர்ர்களா? இன்றும் கூட அப்படித்தான் அவர்கள் அருளை நமக்குப் பெற்றுத்தருபவர்களாக இருக்கின்றார்கள்.

செவிசாய்த்தல் என்பது ஓர் அருள். நாம் பெற்ற அழைப்பின்படி வாழ்ந்து கிறிஸ்தவர்களாக மாறுவது! ஒரு தாயாகவோ, ஒரு தந்தையாகவோ இருக்கின்றீர்களா? ஒரு தாய் மற்றும் தந்தையாக ஒரு கிறிஸ்தவராகுங்கள். நீங்கள் ஒரு தொழில்முனைவோரா, தொழிலாளியா, ஆசிரியரா, அருள்பணியாளரா, துறவறத்தாரா உங்களது சொந்த பாதையில் ஒரு கிறிஸ்தவராகுங்கள். மக்களுக்கு இந்த "உள்ளுணர்வு" உள்ளது. நாம் கிறிஸ்தவர்களாக மாறுகிறோமா இல்லையா என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நம்மைத் திருத்தவும், இயேசுவின் திசையில் பயணிக்க சுட்டிக்காட்டவும் அவர்களால் முடியும்.

பல ஆண்டுகளாக, ஆயர் பணியாற்றிய புனித அம்புரோஸ் தனது மக்களுக்கு நிறைய கொடைகளைக் கொடுத்தார். எடுத்துக்காட்டாக, திருப்பாடல்கள் மற்றும் பாடல்களைப் பாடுவது, புதிய வழிகளில் வழிபாட்டு நிகழ்வுகளைக் கொண்டாடுவது, மறையுரையாற்றுவது போன்ற பல புதிய வழிகளைக் கண்டுபிடித்தார். உள்ளுணர்வை எவ்வாறு உள்வாங்குவது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார், அதனால் எதிர்நோக்கு பெருகியது. புனித அகுஸ்தினார் அவரது மறையுரையால் மனந்திரும்பி அவரால் திருமுழுக்கு பெற்றார். உள்ளுணர்வு என்பது எதிர்நோக்கின் ஒரு வழி, அதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!

கடவுள் தனது திருஅவையை அதன் புதிய பாதைகளைக் காட்டுவதன் வாயிலாக முன்னோக்கி நகர்த்துகின்றார். உள்ளுணர்வு என்பது வரவிருக்கும் இறையரசு பற்றி எளியவர்களின் உணர்வாகும். கடவுளின் கனவுகளை உள்ளுணர்ந்து பணியாற்றுவதற்கு நற்செய்தியின்படி எளிய மனம் கொண்டவர்களாக மாற இந்த யூபிலி நமக்கு உதவட்டும் என்று தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 செப்டம்பர் 2025, 10:05

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >