தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இயேசுவின் இறப்பு

இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” என்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 10, புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு “இயேசுவின் இறப்பு” என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

உரோம் நகரில் நள்ளிரவு முதலே மழைபொழியத் தொடங்கி காலையில் சற்றே குறையத் தொடங்கி இருந்தது. இதமான குளிர்காற்றும் மெல்லிய சாரலையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் வத்திக்கான் வளாகத்தில் மக்கள் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்காகக் கூடியிருந்தனர். மறைக்கல்வி உரைக்கு முன்பாக வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் வாகனத்தில் வலம்வந்து அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. அதன்பின் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தினை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தினைத் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாற்கு நற்செய்தியில் உள்ள “இயேசு உயிர்விடுதல்” என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.

மாற்கு 15: 33-39

இயேசு உயிர்விடுதல்

நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, “இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, “பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்” என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” என்றார்.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைகளை திருப்பயணிகளுக்கு எடுத்துரைக்கத் துவங்கினார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைச்சுருக்கத்திற்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று நாம் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையின் உச்சகட்டமான சிலுவை மரணத்தைப் பற்றி சிந்திக்க இருக்கின்றோம். நம்பிக்கையின் அறிவாற்றலுடன் சிந்திக்கத் தகுதியான ஒரு விலைமதிப்பற்ற கருத்திற்கு இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் வரிகள் சான்றளிக்கின்றன. சிலுவையில், இயேசு அமைதியாக இறக்கவில்லை. எரியும் ஒரு ஒளியைப் போல அவர் மெதுவாக மங்கி அணையவில்லை, மாறாக, தனது வாழ்வை ஒரு கூக்குரலுடன் உரத்தக்குரலுடன் நிறைவுசெய்கின்றார். இதனையே நற்செய்தி, “இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்” (மாற்கு 15:37) என்று எடுத்துரைக்கின்றது. இயேசுவின் இக்கூக்குரல் துன்பம், கைவிடப்படுதல், நம்பிக்கை, அர்ப்பணம் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இக்கூக்குரல் ஓர் உடல் தனது உயிர் தன்னை விட்டுப் பிரியும்போது ஏற்படுத்தும் குரல் மட்டுமல்ல, மாறாக, தனது வாழ்க்கையையும் தன்னையும் இறைவன் கையில் ஒப்படைப்பதன் இறுதி அடையாளமாகும்.

இயேசுவின் உரத்தக்குரலானது உள்ளத்தை மிகவும் பிளக்கும் ஒரு கேள்வியுடன் எழுகின்றது. அது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்ற வார்த்தைகளாகும். இயேசுவின் இவ்வார்த்தைகள் திருப்பாடல் எண் 22 இன் முதல் வரிகளாகும். இந்த இறைவார்த்தைகள் இயேசுவின் உதடுகளில் ஒரு தனித்துவமான மகத்துவத்தைப் பெறுகிறது. எப்போதும் இறைத்தந்தையுடன் நெருக்கமான ஒற்றுமையில் வாழ்ந்த மனுமகன், இப்போது அமைதியை, இல்லாமையை, துன்பத்தின் படுகுழியை அனுபவிக்கிறார். இது நம்பிக்கைக்கான நெருக்கடி அல்ல, மாறாக தன்னை முழுமையாகக் கொடுக்கும் அன்பின் இறுதிக் கட்டம். இயேசுவின் கூக்குரல் விரக்தி அல்ல, மாறாக நேர்மை, வாழ்வின் எல்லைக்குக் கொண்டுவரப்பட்ட உண்மை, எல்லாமே அமைதியாக இருந்தாலும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை.

“நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. இயேசு உரக்கக் கத்தி உயிர் துறந்தபொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது” (மாற்கு 15:33,38) என்று நற்செய்தியின் இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. படைப்பும் படைப்பாளருடன் சேர்ந்து தானே அந்த துன்பத்தில் பங்கேற்பது போல் தெரியும் அதேவேளையில், புதிய ஒன்றையும் வெளிப்படுத்துகிறது. அதாவது கடவுள் இனி ஒரு திரைக்குப் பின்னால் வாழ்வதில்லை மாறாக அவருடைய முகம் இப்போது சிலுவையில் அறையப்பட்டவருக்குள் முழுமையாகத் தெரிகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. அந்த சிதைவடைந்த மனிதனின் முகத்தில் தான், மிகப்பெரிய கடவுளின் அன்பு வெளிப்படுகிறது. தொலைவில் இல்லாத, ஆனால் இறுதிவரை நம் துன்பத்தைக் கடந்து செல்லும் ஒரு கடவுளை நாம் அங்குதான் அடையாளம் காண முடிகின்றது.

நூற்றுவர் தலைவர், இதனை புரிந்து கொள்கின்றனர். ஆம் புறஇனத்தவரான அவர் இதனைப் புரிந்துகொள்கிறார். இயேசுவோடு தனிமையாக உரையாடி அவரது பேச்சைக் கேட்டதால் அல்ல, ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்ப வழியில் இறப்பதைக் கண்டதால் இதனை உணர்ந்து கொள்கின்றார். இயேசு இறக்கும்போது அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” என்கின்றார். (மாற்கு 15:39). இயேசுவின் இறப்பிற்குப் பிறகு வந்த இது முதல் விசுவாச அறிக்கை இது. காற்றில் மறைந்து போகாத, ஆனால் ஒரு மனிதரின் இதயத்தைத் தொட்ட கூக்குரலின் பலன். சில நேரங்களில், வார்த்தைகளால் சொல்ல முடியாததை நாம் நம் குரலால் வெளிப்படுத்துகிறோம். நமது இதயம் உணர்வால் நிரம்பியிருக்கும்போது, ​​அது கூக்குரலிடுகிறது. அது எப்போதும் பலவீனத்தின் அறிகுறியாக இருக்காது; மாறாக மனிதகுலத்தின் ஆழமான செயலாகக்கூட இருக்கலாம்.

கூக்குரலிடுவதை ஒழுங்கற்ற ஒன்றாக, அடக்கப்பட வேண்டிய ஒன்றாக நாம் நினைத்துப் பழகிவிட்டோம். நற்செய்தி நமது கூக்குரலுக்கு ஒரு மகத்தான மதிப்பைக் கொடுக்கிறது, ஆம் நமது கூக்குரல் ஒரு வேண்டுகோளாக, ஓர் எதிர்ப்பாக, ஒரு விருப்பமாக, ஒரு சரணாகதியாக இருக்கலாம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மிடம் வார்த்தைகள் இல்லாதபோது, ​​செபத்தின் தீவிர வடிவமாக அந்த கூக்குரல் இருக்கலாம். இயேசு தனது உரத்தக் குரலின் வழியாக அவருடைய அன்பு, நம்பிக்கை என தன்னிடம் இருந்த அனைத்தையும் கூக்குரலில் வைக்கின்றார்.

அவரது உரத்தக்குரலில் ஏமாற்றமடையாத எதிர்நோக்கும் அடங்கியுள்ளது. நமது கூக்குரலுக்கு யாராவது செவிசாய்க்க முடியும் என்று எண்ணும்போது, நாம் இன்னும் அதிகமாகக் குரல் எழுப்புகின்றோம். நமது கூக்குரல் விரக்தியால் அல்ல, மாறாக விருப்பத்தால் எழுகின்றது. இயேசு விண்ணகத் தந்தைக்கு எதிராகக் கூக்குரலிடவில்லை, மாறாக அவரை நோக்கியேக் கூக்குரல் எழுப்புகின்றார். ஆழ்ந்த அமைதியிலும் கூட, விண்ணகத்தந்தை இருக்கிறார் என்று அவர் உறுதியாக நம்பினார். எல்லாம் தொலைந்து போனதாகத் தோன்றினாலும், நாம் விண்ணகத்தந்தையை நோக்கி நம்பிக்கைக் கூக்குரலிட முடியும் என்பதை அவர் நமக்குக் காட்டினார்.

ஆண்டவரை நோக்கி உரத்த குரல் எழுப்புவது ஓர் ஆன்மிக அடையாளமாக மாறுகிறது. இந்த உலகில் பிறக்கும் நாம் எழுப்பும் முதல் குரல் அழுகை கூக்குரல் தான் அது வெறும் அழுகை மட்டுமல்ல. நாம் உயிருடன் இருப்பதற்கான அடையாளமாகவே உரத்தக்குரல் எழுப்புகின்றோம். துன்புறும்போது மட்டுமல்ல மாறாக, அன்பு செய்யும்போது, அழைக்கும்போது, எடுத்துரைக்கும்போது என நாம் பல வேளைகளில் உரத்த குரலினை எழுப்புகின்றோம்.

நமது வாழ்க்கைப் பயணத்தில், மெதுவாக நம்மை விழுங்கும் தருணங்களாகிய எல்லாவற்றையும் உள்ளே வைத்திருக்கின்றோம். அது நேர்மையாகவும், பணிவாகவும், தந்தையை நோக்கி இயக்கப்பட்டதாகவும் இருக்கும் வரை, உரத்தக்குரல் எழுப்ப நாம் அஞ்ச வேண்டாம் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். அன்பிலிருந்து வரும் கூக்குரல் ஒருபோதும் பயனற்றதல்ல. அக்குரல் கடவுளிடம் ஒப்படைக்கப்பட்டால் அது ஒருபோதும் புறக்கணிக்கப்படாது. இழிவான தன்மைக்கு அடிபணியாமல் இருப்பதற்கும், மற்றோர் உலகம் சாத்தியம் என்று தொடர்ந்து நம்புவதற்கும் ஒரு சிறந்த வழியாக அக்கூக்குரல் உள்ளது.

அன்பான சகோதர சகோதரிகளே, இதையும் கடவுளாகிய இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். தீவிர சோதனையின் நேரம் வரும்போது எதிர்நோக்கின் உரத்தக்குரலை எழுப்புவதைக் கற்றுக்கொள்வோம். காயப்படுவதற்காகவோ , காயப்படுத்துவதற்காக அல்ல, மாறாக, நம்மை நாமே அவரிடம் ஒப்படைப்பதற்காக. ஒருவர் மற்றவருக்கு எதிராகக் கூச்சலிடுவதற்கு அல்ல மாறாக நம் இதயங்களைத் திறப்பதற்காக. நமது  கூக்குரல் உண்மையாக இருந்தால், அது ஒரு புதிய ஒளியின், ஒரு புதிய பிறப்பின் வாசலாக இருக்கலாம். எல்லாம் முடிந்துவிட்டதாகத் தோன்றியபோது, ​​உண்மையில் மீட்பு தொடங்கவிருந்தது  என்று நம்பிய இயேசுவைப் போல நமது வாழ்வும் இருக்கும். கடவுளின் பிள்ளைகள் நாம் என்ற நம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் நமது கூக்குரல் வெளிப்பட்டால், நமது மனிதகுலத்தின் துன்பக் குரல், கிறிஸ்துவின் குரலுடன் ஒன்றிணைந்து, நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் எதிர்நோக்கின் ஆதாரமாக மாறும்.

இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இத்தாலிய மறைமாவட்ட ஆயர்கள், பங்குத்தள மக்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார். ஒவ்வொருவரும்  இதயங்களையும், குடும்பங்களையும், சமுதாயத்தையும் புதுப்பிக்கும் மீட்பராகிய கிறிஸ்துவின் அருளுக்குத் தாராளமாக பதிலளிக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

உரோமில் உள்ள Sant'Alessio, Grumo Appula வின் Santa Maria Assunta, Castellamare di Stabia இல் உள்ள Sant'Antonio di Padova ஆகியவற்றைச் சார்ந்த தலத்திருஅவை மக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், பால்மி, பெர்காமோ மற்றும் பெரிச் பகுதியிலிருந்து வந்திருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

இத்தாலிய திருஅவைச்சட்ட மாநாட்டில் பங்கேற்பாளர்கள், இறைஇரக்க இயேசுவின் அருள்சகோதரர்களின் 25ஆவது ஆண்டு வெள்ளிவிழா பங்கேற்பாளர்கள், நுண்ணுயிரியல் பற்றிய பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை.

இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், ஒவ்வொருவருக்கும் தனது செபங்களை உறுதியளித்து, முதிர்ச்சியடைந்த நம்பிக்கையின் பரிசை அனைவருக்கும் இறைவனிடம் கேட்பதாகவும் எடுத்துரைத்தார்.

உடல்நோய்வாய்ப்பட்டிருக்கும் சூழலிலும், எப்போதும் வலுவான நம்பிக்கை கொண்டவர்களாகவும் புதுமணத் தம்பதிகள், எப்போதும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க வலியுறுத்தி அனைவருக்கும்  தனது ஆசீரினை அளித்தார் திருத்தந்தை.

இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த மக்களுக்கு தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 செப்டம்பர் 2025, 11:24

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >