திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - இயேசுவின் உயிர்ப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
அக்டோபர் 1, புதன்கிழமை மாதத்தின் முதல் நாளன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு என்னும் யூபிலி ஆண்டு தொடர் மறைக்கல்வி உரையில் கடந்த சில வாரங்களாக இயேசுவின் பாடுகள், மரணம், கல்லறை ஆகியவை பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இன்று இயேசுவின் உயிர்ப்பு பற்றியக் கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் திறந்த காரில் பயணித்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரைக் கூட்டத்தினை ஆரம்பித்தார். அதன்பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள யோவான் நற்செய்தியில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
யோவான் 20: 19 – 23
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.வ்இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கருத்துக்களை இறைமக்களுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
நமது நம்பிக்கையின் அடித்தளமும், எதிர்நோக்கின் இதயமும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உறுதியாக வேரூன்றியுள்ளது. நற்செய்திகளை நாம் கவனமாக வாசிக்கும் பொழுது, இந்த மறைபொருள் நமக்கு ஆச்சரியத்தினை அளிக்கிறது என்பதை நாம் உணர்கின்றோம். ஏனெனில் ஒரு மனிதன்ர், கடவுளின் மகன் இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், என்பது மட்டுமன்றி அவர் அவ்வாறு செய்ய முடிவு செய்த விதமும் கூட நம்மை வியப்பிற்குள்ளாக்குகின்றது. உண்மையில், இயேசுவின் உயிர்த்தெழுதல் ஓர் அற்புதமான வெற்றியோ, அல்லது அது அவரது எதிரிகளுக்கு எதிரான பழிவாங்கலோ அல்லது அவமானப்படுத்துதலோ அல்ல. ஒரு பெரிய தோல்விக்குப் பிறகு அன்பு எவ்வாறு மீண்டும் உயிர்த்தெழுந்து அதன் தடுக்க முடியாத பயணத்தைத் தொடர முடியும் என்பதற்கான ஓர் அற்புதமான சான்றாக இயேசுவின் உயிர்ப்பு திகழ்கின்றது.
மற்றவர்களால் ஏற்பட்ட ஓர் துயரமான நிகழ்விற்குப் பிறகு நாம் மீண்டும் எழுந்திருக்கும்போது, பெரும்பாலும் நமது முதல் எதிர்வினை கோபமாகவும், நாம் அனுபவித்த துயரத்திற்கு யாரையாவது பிணையமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமாகவும் இருக்கின்றது. ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு இவ்வழியில் எதிர்வினையாற்றுவதில்லை. இறந்தோர் உலகத்திலிருந்து அவர் வெளிவரும்போது, இயேசு யாரையும் பழிவாங்கவில்லை. அவர் அதிகாரம் மிக்க செயல்களை செய்ய விரும்பவில்லை. மாறாக, சாந்தத்துடன் மீண்டும் சீடர்களைச் சந்தித்தார். எந்த காயத்தையும் விட பெரியதும் எந்த துரோகத்தையும் விட வலிமையானதுமான அன்பின் மகிழ்ச்சியை அவர் தன்னுடைய சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
உயிர்த்தெழுந்தவர் தனது சொந்த மேன்மையை மீண்டும் வலியுறுத்தவோ அல்லது உறுதிப்படுத்துவதற்கான எந்த ஒரு அவசியத்தையும் உணரவில்லை. அவர் தனது நண்பர்களான சீடர்களுக்குத் தோன்றுகிறார், மேலும் அவர் மிகுந்த விவேகத்துடன் அதைச் செய்கிறார். அவர்களின் ஏற்றுக்கொள்ளும் திறனின் வேகத்தை கட்டாயப்படுத்தாமல் அவர்களுடன் மீண்டும் ஒன்றிப்பிற்குத் திரும்புவதும், அவர்களின் குற்ற உணர்வைக் கடக்க உதவுவதும் மட்டுமே அவரது ஒரே விருப்பமாக இருந்தது. மேல் அறையில் ஒன்றாகக் கூடியிருந்த சீடர்களை உயிர்த்த இயேசு சந்தித்த நிகழ்வில் இதனை நாம் நன்றாகக் காண்கிறோம், அங்கு அச்சத்தால் சூழப்பட்டிருக்கும் தனது நண்பர்களுக்கு இறைவன் தோன்றுகிறார். இது அவரின் அசாதாரண ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு தருணமாக விளங்குகின்றது. இயேசு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க இறந்தோரின் உலகத்திற்கு இறங்கிய பிறகு, அச்சத்தால் முடங்கிப் போனவர்களின் மூடிய அறைக்குள் நுழைகிறார். யாரும் நம்ப முடியாத ஒரு கொடையாகிய அமைதியை அவர் அவர்களுக்குக் கொண்டு வருகிறார்.
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" (யோவான் 20:19) என்ற அவரது வாழ்த்து எளிமையானது, ஏறக்குறைய சாதாரணமானது. ஆனால் அது மிகவும் அழகான ஒரு செயலுடன் சேர்ந்துள்ளது, அது கிட்டத்தட்ட குழப்பத்தை ஏற்படுத்துகிறது: இயேசு சீடர்களுக்கு காயம்பட்ட தனது கரங்களையும், உணர்வுப்பூர்வமாக அடையாளங்களுடன் காட்டுகிறார். அந்த வியத்தகு நேரங்களில், தன்னை மறுதலித்து கைவிட்டவர்களுக்கு ஏன் தனது காயங்களைக் அவர் காட்டவேண்டும்? அவர் அனுபவித்தக் கொடூரமான அந்த துயரத்தின் அறிகுறிகளை, அவமானத்தின் காயங்களை மறைக்காவல் ஏன் அதனை அவர்களுக்குத் திறந்த காட்ட வேண்டும்?
கடவுளைக் கண்டு சீடர்கள் மகிழ்ந்தார்கள் என்று நற்செய்தியானது நமக்கு எடுத்துக் கூறுகிறது ( யோவான் 20:20). காரணம் ஆழமானது: இயேசு இப்போது தான் அனுபவித்த எல்லாவற்றுடனும் முழுமையாக நல்லிணக்கம் செய்து கொண்டார். வெறுப்பின் நிழல் கூட அவரிடம் இல்லை. காயங்கள் நிந்தனை செய்வதற்காக அல்ல. மாறாக, எந்த துரோகத்தையும் விட வலுவான அன்பை உறுதிப்படுத்த அவை உதவுகின்றன. நமது தோல்வியின் தருணத்திலும் கூட, கடவுள் பின்வாங்கவில்லை என்பதற்கு அவை சான்றாகும். அவர் நம்மைக் கைவிடவில்லை. அவருடையது அவமானப்படுத்தாத அன்பு; அது அன்பிற்காக துன்பப்பட்டு, இப்போது அது மதிப்புக்குரியது என்று இறுதியாக உறுதிப்படுத்தக்கூடிய ஒருவரின் அமைதி.
மாறாக, நாம் பெரும்பாலும் பெருமையினாலோ அல்லது பலவீனமாகத் தோன்றுமோ என்ற பயத்தினாலோ நம் காயங்களை மறைக்கிறோம். ஆனால் நம்மைக் காயப்படுத்திய துரோகங்களுடன் நாம் உண்மையிலேயே அமைதியாக இல்லை. அவர் தனது காயங்களை மன்னிப்பின் உறுதியான அடையாளமாக வழங்குகிறார். மேலும் உயிர்த்தெழுதல் என்பது கடந்த காலத்தை அழிப்பது அல்ல, மாறாக அது இரக்கத்தின் நம்பிக்கையாக மாறுவது என்பதைக் காட்டுகிறார்.
பின்னர், கடவுள் மீண்டும் கூறுகிறார். "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்!". "தந்தை என்னை அனுப்பியது போல, நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றும் அவர் மேலும் கூறுகிறார். இந்த வார்த்தைகளால், அவர் திருத்தூதர்களிடம் ஒரு பொறுப்பைப் போல அதிகாரம் இல்லாத ஒரு பணியை ஒப்படைக்கிறார். உலகில் நல்லிணக்கத்திற்கான கருவிகளாக இருக்க வேண்டும். "தோல்வியையும் மன்னிப்பையும் அனுபவித்த நீங்கள் இல்லையென்றால், இறைத் தந்தையின் இரக்கமுள்ள முகத்தை யாரால் அறிவிக்க முடியும்?".
இயேசு அவர்கள் மீது ஊதி, அவர்களுக்கு தூய ஆவியைக் கொடுக்கிறார் இறைத்தந்தைக்குக் கீழ்ப்படிதலிலும், சிலுவை வரை அன்பிலும் அவரைத் தாங்கியதும் அதே தூய ஆவியே. அந்த தருணத்திலிருந்து, திருத்தூதர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் பற்றி இனி அமைதியாக இருக்க முடியாது என்று முழுமையாக நம்பிக் கடவுள் மன்னிக்கிறார், உயர்த்துகிறார், நம்பிக்கையை மீட்டெடுக்கிறார் என்று எடுத்துரைக்க ஆரம்பித்தனர்.
இதுவே திருஅவையின் பணியின் மையக்கரு. மற்றவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதல்ல, மாறாக அன்பு செய்யப்படுபவர்கள் அதற்கு தகுதியற்றவர்களாக இருக்கும்போது அவர்களின் மகிழ்ச்சியைத் துல்லியமாகத் தெரிவிப்பதாகும். மற்றவர்களுக்கு அதைக் கொடுக்கக்கூடிய வகையில் வாழ்க்கைக்குத் திரும்புவதன் அழகைக் கண்டறிந்த ஆண்களும், பெண்களும், கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கியதும், அவர்களை வளரச் செய்ததும் இந்த வலிமையால்தான்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, நாமும் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். கடவுள் தம்முடைய காயங்களை நமக்குக் காட்டி, கூறுகிறார்: உங்களுக்குச் அமைதி உரித்தாகுக என்று. உங்கள் காயங்கள் இரக்கத்தால் குணமடைந்ததைக் காட்ட அஞ்சாதீர்கள். பயத்திலோ குற்ற உணர்ச்சியிலோ சிக்கியிருப்பவர்களிடம் நெருங்கி வர பயப்படாதீர்கள். தூய ஆவியின் சுவாசம் நம்மையும் இந்த அமைதிக்கும், எந்த தோல்வியையும் விட வலிமையான இந்த அன்பிற்கும் சாட்சிகளாக மாற்றட்டும்.
இவ்வாறு திருத்தந்தை அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.
மடகஸ்காரில் நடைபெற்று வரும் வன்முறைச் சூழல்கள் குறித்து தான் வருந்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சட்ட அமலாக்கப் பிரிவினருக்கும் இளம் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் மிகவும் வருத்தத்தை அளிக்கின்றன என்றும் கூறினார். வன்முறையினால் பலர் இறந்துள்ளனர் ஏறக்குறைய நூறு பேர் காயமடைந்துள்ளனர் என்றும், எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைத்து வகையான வன்முறைகள் எப்போதும் தவிர்க்கப்படவும், நீதி மற்றும் பொது நன்மையை மேம்படுத்துவதன் வழியாக சமூக நல்லிணக்கத்திற்கான தொடர்ச்சியான முயற்சிகள் வளர்க்கப்படவும் இறைவனிடம் செபிப்போம் என்றும் கூறினார்.
குறிப்பாக தமிழ் மொழி பேசும் மக்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இன்றைய மறைக்கல்வி உரையில் பங்கேற்கும் தமிழ் பேசும் திருப்பயணிகள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். புனித செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமான இந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நமது உலகில் அமைதிக்காக ஒவ்வொரு நாளும் செபமாலை செபிக்க உங்களை அழைக்கிறேன். உங்களது அன்றாட வாழ்வில் நல்லிணக்கத்திற்கான உண்மையுள்ள கருவிகளாக நீங்கள் இருங்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அமைதி உங்கள் அனைவருடனும் இருக்கட்டும்! கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்றும் கூறினார். ஆங்கில மொழியில் திருத்தந்தை எடுத்துரைத்த தமிழ் மக்களுக்கான வாழ்த்துக்களை அருள்சகோதரி மெரினா அவர்கள் மொழிபெயர்த்து வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துரைத்தார்.
இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அக்டோபர் 1 அன்று திருஅவையில் நினைவு கூரும் தூய குழந்தை இயேசுவின் புனித தெரேசா திருவிழாவை நினைவுகூர்ந்தார். திருஅவையின் மறைவல்லுநரும், மறைபரப்புப் பணியாளர்களின் பாதுகாவலருமாக இருக்கும் குழந்தை இயேசுவின் தூய தெரசாவின் முன்மாதிகையானது, எல்லா இடங்களிலும் நற்செய்திக்கு மகிழ்ச்சியான சாட்சியாக, வாழ்க்கைப் பாதையில் இயேசுவைப் பின்பற்ற அனைவரையும் ஊக்குவிக்கட்டும் என்றும் எடுத்துரைத்தார். இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஆசீரினைக் கூடியிருந்த மக்களுக்கு வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
